வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் 4.O நிகழ்ச்சியின் மூலம், உத்தரபிரதேச மாணவர்கள் தமிழ் பயிலும் சூழல் உருவாகியிருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையை பள்ளி மாணவர்கள் மனதில் ஊட்டி வளர்க்கும் காசி தமிழ் சங்கமம் 4.O குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.
புவியியல் ரீதியாகப் பிரிந்திருந்தாலும், பண்பாட்டு ரீதியாகத் தமிழ்நாடும், காசியும் கொண்டிருக்கும் பந்தத்தை வலுப்படுத்தும் நோக்கில், ஆண்டுதோறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு மிகப் பிரமாண்டமாக நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளை மையமாகக் கொண்டு நிகழ்ச்சி நடத்தப்படும் நிலையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் 4.O வெர்சனில், தமிழ் மொழி பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் “தமிழ் கற்கலாம்” என்ற தலைப்பில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்குப் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், உத்தரபிரதேச மாணவர்கள் தமிழ் மொழியின் தொன்மையான வரலாற்றை ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து இந்தி மொழி தெரிந்த தமிழ் ஆசிரியர்கள் 50 பேரை, உத்திரபிரதேசம் அழைத்துச் சென்றுள்ள மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், உத்தர பிரதேச மாணவர்கள் VR மூலமாகத் தமிழ் கற்கும் ஏற்பாட்டை சிறப்பாகச் செய்திருக்கிறது.
உத்தரபிரதேசத்தில் தரமான கல்வியை வழங்குவதற்கு , கடந்த 2023-ம் ஆண்டு முதல் விஆர் தொழில்நுட்ப முறையில் பாடம் நடத்தப்படும் நிலையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கும் அது பெரிதும் கைகொடுத்திருக்கிறது.
15 நாட்களில் தமிழ் மொழியின் அடிப்படைகளை கற்றுக்கொள்ளும் உத்தர பிரதேச மாணவர்கள், மேற்படி தமிழ் பயில விரும்பினால், அதற்கான ஏற்பாடுகளையும் அம்மாநில அரசு செய்து கொடுக்க உள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இரண்டாம் கட்டமாக, தமிழகத்தில் டிசம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் வாரணாசியிலிருந்து 300 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் பயணத்தில் தமிழ் பண்பாடு, புராதனமான கலாசாரம், நாகரீக தொடர்பு உள்ளிட்டவை குறித்து இந்தி மொழி பேசும் மாணவர்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது.
















