பஞ்சாபில் சிந்து தனிநாடு கோரி சிந்து மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. உண்மையில் என்ன நடந்தது? சிந்து மக்கள் தனி நாடு கோரிக்கையை ஏன் முன்வைக்கிறார்கள் ? என்பது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
சிந்து நதி மற்றும் தார் பாலைவனத்தை ஒட்டியுள்ள நிலப்பகுதியான சிந்து தற்போது பாகிஸ்தானின் தென்கிழக்கு மாநிலமாக உள்ளது. இப்போது இதன் தலைநகரம் கராச்சியாகும். 30 மாவட்டங்கள் கொண்ட பாகிஸ்தானின் 3வது பெரிய மாகாணமான சிந்துவில் சுமார் ஐந்தரை கோடி மக்கள் வசிக்கின்றனர்.
பெரும்பான்மையாக சிந்தி மக்கள் வாழ்ந்த இந்தப் பகுதியில் இப்போது 94 சதவீதத்துக்கும் மேல் இஸ்லாமியர்கள் உள்ளனர். பண்டைய காலத்தில் பரந்த பாரதத்தின் ஒரு முக்கிய பகுதியாக விளங்கிய சிந்து, உலகின் முதன்மை நாகரீகங்களில் ஒன்றான சிந்து சமவெளி நாகரீக வரலாற்றைக் கொண்டது.
சிந்து நதியின் ஓட்டத்தில் ஐந்து நதிகள் கூடுமிடத்தில் அமைந்துள்ளது இந்தச் சிந்து தேசம். அக்னிபுராணத்தில் மட்டுமின்றி இராமாயணத்திலும், மகா பாரதத்திலும் வடக்கில் இமயமலையின் தெற்கே 7 முக்கிய மலைத் தொடர்களைக் கொண்ட குலபர்வதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த ஆரவல்லி மலை தொடரையே பாரியாத்ரம் என்றும் அங்கே சிந்து தேசம் இருந்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. முகமது பின் காசிமின் படையெடுப்புக்கு முன் சிந்து மாகாணத்தில் இந்துக்களே பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தனர். பிரிவினையின் போது, சிந்து நிலப்பகுதி பாகிஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டது. அந்தக்காலத்தில் லட்சக்கணக்கான சிந்தி குடும்பங்கள் இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.
கடந்த காலங்களில் சிந்து மாகாணத்தில் வாழும் சிந்தி மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகச் சிந்தி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். உருது மொழி திணிப்பு ஒருபுறம் என்றால் சிந்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மறுபுறம். இப்படி வாழ முடியாத சூழலில் சிந்தி மக்கள் இந்த மாகாணத்தை விட்டுப் புலம்பெயர்கிறார்கள். மத ரீதியில் சிந்தி மக்கள் ஓரங்கட்டப்பட்டு வருவதால், பாகிஸ்தானில் உள்ள சிந்து மக்களுக்கு ஒரு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமானது. 1967-ல் முதன்முதலாகச் சிந்து தேசத்தைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
மீண்டும் 1971-ல் வங்கதேச பிரிவினைக்குப் பிறகு இந்தக் கோரிக்கை அதி தீவிரமானது. நாடுகடத்தப்பட்ட சிந்தி தலைவர் ஷாஃபி பர்பத் தலைமையிலான ஜெய் சிந்து முத்தஹிதா மஹாஸ் (JSMM) என்ற அமைப்பு, ஐநா சபை தலையீட்டு சிந்து தேசத்தை ஒரு தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. “சிந்து பாகிஸ்தான் அல்ல” என்று அறிவித்த ஷாஃபி பர்பத், இந்தப் பகுதியின் பெரும்பான்மை சிந்தி மக்களின் ஒப்புதல் இல்லாமல் இணைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கூடுதலாக, மொத்த வருவாயில் 63 சதவீதத்தை சிந்து மாகாணமே தருகிறது என்றாலும் அதிகாரமெல்லாம் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் சிந்து தேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள பாரம்பரிய வரலாற்று மற்றும் பண்பாட்டு உறவுகளை மேற்கோள் காட்டி, JSMM தனது தனிநாடு கோரிக்கையை ஆதரிக்குமாறு பிரதமர் மோடியிடமும் வேண்டுகோள் வைத்தது. இந்நிலையில், சிந்து கலாசார தினத்தை முன்னிட்டு சிந்துதேசம் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து கராச்சியில் கடந்த 7ம் தேதி போராட்டம் நடந்தது. பாகிஸ்தான் முர்தபாத் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இது சிந்து மக்களின் நீண்ட கால கனவையும் உணர்வையும் வெளிப்படுத்துவதாக இருந்தது. போராட்டத்தின் போது நடந்த பேரணிக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகளைக் காவல்துறையினர் பயன்படுத்தினர்.
இந்த வன்முறையில் 5 போலீசார் காயமடைந்தனர். கடந்த நவம்பர் மாதம் டெல்லியில் நடந்த ஒரு விழாவில் பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும் வரலாற்று கலாச்சார ரீதியாக சிந்து பகுதி இந்தியாவுடன் பின்னிப் பிணைந்துள்ளது என்றும், எல்லைகள் மாறலாம் என்றும் தெரிவித்ததும், உடனடியாக ராஜ்நாத் சிங்கின் கருத்தை JSMM வரவேற்று அறிக்கை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.
















