கடந்த 12 மாதங்களாக வங்கதேசம் முழுவதும் லாக்கப் மரணங்கள், படுகொலைகள் எனக் கடுமையான மனித உரிமை மீறல்களும் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் அதிகார துஷ்பிரயோகங்களும் எல்லை மீறி நடக்கின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தொடர்ச்சியான மனித உரிமை மீறல்கள் மூலம், முன்னாள் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா படிப்படியாக ஒரு சர்வாதிகாரியாகவே மாறியிருந்தார். 15 ஆண்டுகளுக்கும் மேல் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிரான போராட்டம், தீவிரமடைந்ததை அடுத்து, வேறு வழி இல்லாமல் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, பிரதமர் பதவியை விட்டு விலகி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றதும் நாட்டில் அமைதியும் மனித உரிமைக்குப் பாதுகாப்பும் இருக்கும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த எந்தச் சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 256-க்கும் அதிகமான கலவரங்களும் வன்முறைகளும் நடந்துள்ளன. இதில் சுமார் 140க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் 231 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது முந்தைய இரண்டு ஆண்டுகளின் புள்ளிவிவரங்களை விட மிக அதிகம் என்று மனித உரிமைகள் ஆதரவு சங்கத்தின் HRSS அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த வன்முறைகளால் இந்துக்களின் வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக வளாகங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. மேலும் துர்கா பூஜை, இந்து கலாச்சார நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் இந்து பெண்களின் விளையாட்டு நிகழ்வுகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. சொல்லப்போனால் இஸ்லாமிய மத அமைப்புகள் தங்கள் அரசியல் நலன்களுக்காக வன்முறையை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளன.
இந்நிலையில், கடந்த 11 மாதங்களில் சட்டத்துக்குப் புறம்பாக 29 காவல்துறை மரணங்கள் நடந்துள்ளதாக Ain o Salish Kendra (ASK) ஏஎஸ்கே அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் இதே காலகட்டத்தில் 28 தண்டனைக் கைதிகளும், 55 விசாரணைக் கைதிகளும் சிறையில் மர்மமான முறையில் இறந்துள்ளனர் என்றும் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. கடந்த 11 மாதங்களில் 90 கைதிகள் நோய்வாய்ப்பட்டு இறந்ததாகச் சிறைத்துறை இயக்குநரகத்தின் உதவி ஆய்வாளர் ஜெனரல் ஜன்னத்-உல் ஃபர்ஹாத், கூறியுள்ள்ளார்.
காவல்துறை தலைமையகத்தின் உதவி ஆய்வாளர் சஹாதத் ஹொசைன், தற்கொலைகள் மற்றும் கலவரத்தால் இறந்தவர்களை மனித உரிமை அமைப்புகள் லாக்கப் மரணங்களாகக் காட்டுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, 2024 ஆகஸ்ட் முதல் 2025 ஜூலை வரை முகமது யூனுஸின் இடைக்கால அரசில் பத்திரிகையாளர்கள் மீது 878 தாக்குதல்கள் நடந்துள்ளன.
முந்தைய ஆண்டை விட இது சுமார் 230 சதவீதம் அதிகம் என்று உரிமைகள் மற்றும் அபாயங்கள் பகுப்பாய்வுக் குழு (RRAG) தெரிவித்துள்ளது. அனைத்து சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் லாக்கப் மரணங்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும், காவல்துறையினர் சட்டத்தின் படி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
















