திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் சால்வைகளில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த ஊழல் எப்படி நிகழ்ந்தது? பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது திருப்பதி லட்டுவில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலக்கபட்டதாகக் கடந்தாண்டு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் பூதாகரமாகவே, தேசியளவில் முக்கிய பேசுபொருளானது. திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருந்ததும், பல கோடி ரூபாய் அளவில் மோசடி நடைபெற்றதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த லட்டு விவகாரமே இன்னும் ஓயவில்லை. அதற்குள் திருப்பதியில் வழங்கப்படும் சால்வையிலும் ஊழல் நடைபெற்றள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். அத்துடன், அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலரும் ஏழுமலையானை தரிசனம் செய்யத் திருப்பதிக்கு சென்று வருகின்றனர்.
அவ்வாறு வரும் பிரபலங்களுக்குத் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்படும். அதேபோல், 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தரிசன டிக்கெட் வாங்கும் பக்தர்களுக்கும் ரங்க நாயக மண்டபத்தில் இந்தச் சால்வை அணிவிக்கப்படும். இதனால், திருப்பதி லட்டு போலவே, திருப்பதி சால்வையும் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது.
திருநாமம், சங்கு, சக்கரம் ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும் இந்தச் சால்வைகள் பட்டு நூலால் தயாரிக்கப்படுகின்றன. நெய்யை போலவே, இந்த சால்வைகளும் டெண்டர் முறையில்தான் வாங்கப்படுகின்றன. 2015ம் ஆண்டு முதல் VRS Export என்ற நிறுவனம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு பட்டுச் சால்வைகளை விநியோகம் செய்து வருகிறது. ஒரு சால்வையின் விலை ஆயிரத்து 389 ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இந்தச் சால்வைகளின் தரம் குறித்து சந்தேகம் எழவே, பெங்களூருவில் உள்ள மத்திய பட்டு வாரியத்திற்கு அவை சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
சோதனையின் முடிவில் அந்தச் சால்வைகளில் தூய பட்டுக்கு பதிலாக, தூய பாலிஸ்டர் பயன்படுத்தப்பட்டிருந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒப்பந்தபடி, 100 சதவீத தூய மல்பெரி பட்டை கொண்டு இந்தச் சால்வைகள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். மொத்த எடை 180 கிராமாகவும், இந்தியப் பட்டு மார்க் அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ‘சில்க் மார்க்’ முத்திரையும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், பட்டுக்கு பதிலாகப் பாலிஸ்டரால் சால்வையை தயாரித்துவிட்டு, அதில் சில்க் மார்க் முத்திரையைப் பதித்து VRS Export நிறுவனம் ஏமாற்றியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 350 மதிப்புள்ள பாலிஸ்டர் சால்வை, ஆயிரத்து 300 ரூபாக்கு விற்பனை செய்யப்பட்டதன் மூலம், 54 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. லட்டு விவகாரம் போலவே, சால்வை விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அது தொடர்பான வழக்கு தற்போது ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
















