தேனியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர், ஏலக்காய் வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்து 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்களை வாங்கி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்த 29வது வார்டு திமுக கவுன்சிலரான சங்கர் என்பவர் கடந்த ஏழு மாதங்களில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரை ஏலக்காய் வியாபாரம் செய்து, தன் மூலம் 70 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு புகார் கிடைத்தது.
இதனடிப்படையில், போடி இரட்டை வாய்க்கால் பகுதியில் உள்ள சங்கருக்கு சொந்தமான ஏலக்காய் குடோன் மற்றும் அவரது வீட்டில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினரும், அமலாக்கத்துறையினரும் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஏலக்காய் வியாபாரத்தில் சங்கர் குடும்பத்தினர் வரி ஏய்ப்பு செய்து 100 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வாங்கி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சொத்து விவரங்கள் தொடர்பான பட்டியலை தயாரித்து வருவதாகவும், சங்கரின் மகன் லோகேஷ் வடமாநிலங்களுக்கு 3 ஆயிரம் கிலோ ஏலக்காய் அனுப்பி சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
















