திமுக ஆட்சியில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என்ற தகவல் தவறானது என்பது ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் உறுதியாகி உள்ளதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரத்தில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 728 தொழிற்சாலைகள் மட்டுமே புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆலைகளில் 4 லட்சத்து 29 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் தொழில் முதலீடுகள், தமிழ்நாட்டின் வளர்ச்சி ஆகியவை சார்ந்த விஷயங்களில் திமுக அரசு கூறுவதெல்லாம் பொய்தான் என்பதை ரிசர்வ் வங்கி தரவுகள் நிரூபித்துள்ளதாகக் கூறிய அவர், 30 லட்சம் பேருக்கும் கூடுதலாக வேலை கிடைத்திருப்பதாகத் திமுக அரசு கூறி வருவது எவ்வளவு அப்பட்டமான பொய் என்பதை இந்த அறிக்கை மூலம் அனைவரும் அறிந்து கொள்ளலாம் எனக் குறிப்பிட்டார்.
பொய்களை மட்டுமே கூறி மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள் என அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
















