சென்னை காமராஜர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் குண்டுக்கட்டாகக் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்களை, கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தனியார் நிறுவனத்தில் பணி அமர்த்த மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து ஏற்கனவே தூய்மை பணியாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடம் முன்பு தூய்மை பணியாளர்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தூய்மை பணிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், போலீசார் தூய்மை பணியாளர்களைக் குண்டுக்கட்டாகக் கைது செய்தனர். இருப்பினும் அரசுக்கு எதிரான தங்களது போராட்டம் தொடரும் எனத் தூய்மை பணியாளர்கள் எச்சரித்தனர்.
















