இந்தியாவின் வர்த்தக முன்மொழிவு அமெரிக்காவுக்கு ஏற்றதாக இருந்தால், அவர்கள் நேரடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த 2 நாட்களாக நடந்த அமெரிக்கா – இந்தியா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தையில், சந்தை அணுகல், ஒழுங்குமுறை விதிகள், முதலீடு உள்ளிட்டவை குறித்து இரு நாடுகளும் பரிசீலித்தன.
பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட அமெரிக்க துணை வர்த்தக பிரதிநிதியிடம் இந்தியா தரப்பில் முன்மொழிவுகள் வழங்கப்பட்டன. முதல் கட்ட ஒப்பந்தத்தில் சுங்கங்கள், சேவை வர்த்தகம், டிஜிட்டல் வர்த்தகம் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாகப் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியாகப் பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், சுங்க பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பரஸ்பர உறவுகள் குறித்து ஆலோசித்ததாகத் தெரிவித்தார்.
மேலும், இந்தியாவின் FTA முன்மொழிவு அமெரிக்காவுக்கு ஏற்றதாக இருந்தால், அவர்கள் நேரடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
தற்போது அமெரிக்கா 131.84 பில்லியன் டாலர் வர்த்தகத்துடன், இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது.
இந்தச் சூழலில் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், வரும் 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகம் 500 பில்லியன் டாலரை எட்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
















