ஜி- 7 அமைப்பிற்கு போட்டியாக, C-5 அமைப்பை உருவாக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தப் புதிய கூட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கத்தை குறைக்கலாம் என ட்ரம்ப் யோசிப்பதாகத் தெரிகிறது. எதனால் ட்ரம்ப் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்பதை விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஜி-7 கூட்டமைப்பை ஓரம் கட்ட திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஜி-7 கூட்டமைப்பில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்காவும் உறுப்பு நாடாக அங்கம் வகிக்கும் நிலையில், முழுக்க முழுக்க ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் இருப்பதை ட்ரம்ப் விரும்பவில்லை என தெரிகிறது.
தற்போதைய சூழலில் உலகின் அதிகார மையங்களாகப் பெரும்பாலும் ஆசிய நாடுகளே திகழ்ந்து வரும் நிலையில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய CORE FIVE கூட்டமைப்பை ஏற்படுத்த ட்ரம்ப் ஆர்வம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. சுருக்கமாக C-5 என்று அழைக்கப்படும் இந்தக் கூட்டமைப்பில் அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெறும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், அமெரிக்காவின் POLITICO டிஜிட்டல் பத்திரிக்கையில் இந்தத் தகவல் கசிந்துள்ளது. கடந்த வாரம் வெள்ளை மாளிகை சார்பில் தேசிய பாதுகாப்பு வியூகம் தொடர்பான ஆவணம் வெளியிடப்பட்ட நிலையில், அதற்கான ROUGH COPY-ல், C-5 கூட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான திட்டம் இடம்பெற்றதாக POLITICO நிறுவனம் கூறியுள்ளது.
பொருளாதார ரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் வலுவாக உள்ள நாடுகளை கொண்டும், அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளை கொண்டும், CORE FIVE கூட்டமைப்பு ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக POLITICO பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி பார்த்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படும் எனத் தெரிகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியான சூழலை உருவாக்குவதே, இந்த அமைப்பின் பிரதான நோக்கம் எனக் கூறப்பட்டாலும், ஐரோப்பியா நாடுகளுக்குக் கடிவாளம் போடுவதே ட்ரம்ப்பின் திட்டம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
POLITICO பத்திரிகை வெளியிட்ட செய்தியை வெள்ளை மாளிகை மறுத்திருந்தாலும், ட்ரம்ப்பிடம் இந்த யோசனை நிச்சயம் இருப்பதாகப் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் கூறுகிறார்கள். பைடன் ஆட்சி காலத்தில், ஐரோப்பிய விவகாரத்திற்கான அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழு தலைவராகப் பணியாற்றிய Torrey Taussig கூறுகையில், தனது நிர்வாகத்தைச் சீண்டினால், ஜரோப்பிய கண்டத்தின் முக்கிய புள்ளியாக ரஷ்யாவை மாற்றிவிடுவேன் என அதிபர் ட்ரம்ப் மறைமுக எச்சரிக்கை விடுக்க நினைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் முதல் ஆட்சி காலத்தில் குடியரசுக் கட்சி சார்பில் செனட் உறுப்பினராகப் பதவி வகித்த Michael Sobolik கூறுகையில், சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னரே ட்ரம்ப் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
CORE FIVE கூட்டமைப்பின் மூலம், நிகழ் காலத்தின் அதிகார மையங்களை அடையாளப்படுத்த ட்ரம்ப் நினைப்பதாகத் தெரிவித்துள்ள பாதுகாப்புத்துறை வல்லுநர்கள், ஐரோப்பிய நாடுகள் மீதும், நேட்டோ அமைப்பின் மீதும் ட்ரம்ப்பிற்கு ஏதோ ஒரு வகையில் எதிர்மறை கண்ணோட்டம் உருவாகத் தொடங்கியிருப்பதாகவும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
















