GOOGLE, AMAZON மற்றும் MICROSOFT நிறுவனங்கள் இந்தியாவில் 67 பில்லியன் டாலரை முதலீடு செய்யவுள்ளன. இதன்மூலம் தொழில்நுட்பத்துறையில் இந்தியாவின் தங்கவேட்டை தொடங்கியிருக்கிறது.
1 தொழில்நுட்ப வரலாற்றை சற்று திரும்பிப் பாருங்கள். ஒரு TECHNOLOGY-ஐ புதிதாக கண்டுபிடித்தவர்களைவிட அதை விரைவாக ஏற்றுக்கொண்டு மேலும் பல தொழில்நுட்பங்களை உருவாக்கியவர்கள்தான் வெற்றிபெற்றிருக்கிறார்கள். அதேபோல் AI TECHNOLOGY-ஐ விரைவாக ஏற்றுக்கொண்டு முன்னேறும் நாடுகளும் நிறுவனங்களும்தான் செயற்கை நுண்ணறிவுத் துறையில் வெற்றிபெறும் என்று சொன்னார் MICROSOFT நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா.
அவரது கூற்றுப்படி பார்த்தால் AI RACE-ல் வெல்லப்போவது இந்தியாதான். அதை முன்பே உணர்ந்ததால்தானோ என்னவோ அடுத்த 4 ஆண்டுகளில் 17 புள்ளி 5 பில்லியன் டாலர்களை அதாவது சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போகிறது MICROSOFT. கடந்த இருபது ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பத் துறையின் OUTSOURCING மையமாக இந்தியா இருந்தது. அதாவது வெளிநாட்டு IT COMPANY-களுக்கு தேவையான சேவைகளை நாம் வழங்கிக் கொண்டிருந்தோம்.
அதன்மூலம் இந்திய இளைஞர்களுக்கு வேலை கிடைத்தது என்றாலும் உள்கட்டமைப்புகள் பெரியளவில் மேம்படுத்தப்படவில்லை. அவர்களின் தேவை தீரும் வரை வேலை, அதன்பிறகு ஏதுமில்லை என்ற நிலைமைதான் முன்பிருந்தது. ஆனால் இப்போது பணப்பெட்டியுடன் FLIGHT பிடித்து இந்தியாவுக்கு வருகிறார்கள் பன்னாட்டு நிறுவனங்களின் உயரதிகாரிகள். தொழில்நுட்பத்துறையில் இந்தியா நடத்தி வரும் தங்கவேட்டை இது என்கிறார்கள் TECH உலக ஜாம்பவான்கள். வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் முதலீட்டு மழைபொழிய என்ன காரணம்? இன்றைய சூழலில் தொழில்நுட்பத் துறையில் துணிச்சலோடு முன்னேறுவோர் மட்டும்தான் லாபமீட்ட முடியும் என்பதை சர்வதேச முதலீட்டாளர்கள் உணர்ந்துள்ளனர்.
அதன் காரணமாகவே அவர்களது பார்வை சீனாவில் இருந்து இந்தியாவை நோக்கி திரும்பியிருக்கிறது. கடந்த இருபது ஆண்டுகளாக உலகளாவிய டிஜிட்டல் வளர்ச்சியின் மையமாக சீனா இருந்தது. ஆனால் அண்மைக்காலமாக அங்கு ஏற்பட்ட புவிசார் அரசியல் பிரச்னைகள், பாதுகாப்பு குறைபாடுகள், கொள்கை மாற்றங்கள் போன்வற்றால் பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவைவிட்டு வெளியேறி வருகின்றன. எல்லாம் சரி… அவர்கள் ஏன் நம்நாட்டை நோக்கி வருகிறார்கள்? இந்திய தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான மற்றும் முதன்மையான அடித்தளம் திறமையான மனித வளம்தான். உலகில் உள்ள CHIP வடிவமைப்புப் பொறியாளர்களில் சுமார் 20 விழுக்காடு பேர் இந்தியர்கள்.
ஆங்கிலம் பேசும் திறனுடன் கூடிய மென்பொறியாளர்கள் அதிகம் இருப்பதால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இங்கு வருகின்றன. டிஜிட்டல் பொருளாதாரத்தில் இந்தியா பெற்றிருக்கும் வளர்ச்சியும் TECH கம்பெனிகளை ஈர்த்துள்ளது. 2014-ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைந்தபிறகு பணப்பரிமாற்றத்தை டிஜிட்டல் மயமாக்க பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. குறைந்தவிலையில் இணைய வசதி மற்றும் தகவல் தொடர்பு சேவைகள், UPI பயன்பாடு, DIGITAL INDIA, MAKE IN INDIA, START UP INDIA போன்ற திட்டங்கள் மூலம் நம் நாட்டை டிஜிட்டல் சந்தையாக மாற்றியிருக்கிறது மத்திய அரசு.
அநேகமாக கோடிக்கணக்கில் இணைய பயன்பாட்டாளர்களை கொண்டிருக்கும் ஒரேநாடு இந்தியாவாகத்தான் இருக்கும். எனவே சர்வதேச நிறுவனங்கள் நம்மைத் தேடி வருவதில் பெரிய ஆச்சர்யம் ஏதுமில்லை.
பிரபல ஆன்லைன் சந்தையான அமேசான் அடுத்த 5 ஆண்டுகளில் 35 பில்லியன் டாலர்களை, அதாவது 3 லட்சம் கோடிக்கு மேல் இந்தியாவில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஆன்லைன் வணிகத்தில் இருந்து CLOUD COMPUTING-ஐ நோக்கி திரும்பும் அந்நிறுவனம் அதற்கான களமாக இந்தியாவை தேர்வு செய்திருக்கிறது. அமேசான் மேற்கொள்ளும் முதலீட்டால் 10 லட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சுமார் 40 பில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்துள்ள அமேசான் மேலும் 35 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதால் சிறு குறு நிறுவனங்களும் பயன்பெறும் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். அமேசானைப் போலவே MICROSOFT-ம் பெரும் தொகையை இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளது. எதிர்வரும் 4 ஆண்டுகளில் 17 புள்ளி 5 பில்லியன் டாலர்களை MICROSOFT முதலீடு செய்யப்போவதாக அதன் CEO சத்யா நாதெள்ளா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அவர், AI துறையில் இந்தியா வளர்ச்சியடைய MICROSOFT துணைநிற்கும் என்று கூறியுள்ளார்.
அந்நிறுவனம் ஆசிய கண்டத்தில் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடு இது என்பது இங்கே குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய செய்தி.
அமேசானுக்கும் MICROSOFT-க்கும் முன்பே 15 பில்லியன் டாலரை இந்தியாவில் முதலீடு செய்யப்போவதாக GOOGLE அறிவித்துவிட்டது. நாட்டிலேயே பெரிய AI தரவு மையத்தை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நிறுவப்போவதாக அக்டோபர் மாதம் அந்நிறுவனம் கூறியிருந்தது. அவர்களின் கண்ணோட்டத்தில் பார்த்தால் நீங்க ரொம்ப LATE BOSS என அமேசானையும் MICROSOFT-யும் பார்த்து GOOGLE சொல்லக்கூடும். இந்த மூன்று நிறுவனங்களின் முதலீட்டையும் சேர்த்தால் மொத்தம் 67 பில்லியன் டாலர், அதாவது சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் இந்தியாவுக்கு வரப்போகிறது. இதன்மூலம் உலகின் தொழில்நுட்ப மையமாக நம்நாடு மாறப்போகிறது. 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் நிலவும் சமூக பொருளாதாரச் சூழலும் பன்மொழிப் பயன்பாடும் அதிகளவில் கிடைக்கும் தரவுகளும் AI தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்பாட்டு ரீதியாகவும் மொழி அடிப்படையிலும் பொருளாதார நிலையிலும் வெவ்வேறு அடுக்குகளைக் கொண்ட இந்திய மக்களுக்கு மத்தியில் எந்தச் சிக்கலும் இன்றி ஒரு AI MODEL-ஐ செயல்படுத்திவிட்டால் இந்த உலகத்தின் எந்த மூலைக்கும் அதை கொண்டு சேர்த்துவிடலாம் என தொழில்நுட்ப நிறுவனங்கள் நம்புகின்றன.
அந்த வகையில் பார்த்தால் செயற்கை நுண்ணறிவை மேம்படுத்தும் ஆய்வுக்கூடமாக இந்தியா திகழப்போகிறது. AI-ஐப் போல வளர்ந்து வரும் மற்றொரு முக்கியமான தொழில்நுட்பம் CLOUD COMPUTING. தரவுகளை சேமித்தல், NETWORKING உள்ளிட்ட சேவைகளை இணையத்தின் வாயிலாக வழங்கும் முறைக்கு CLOUD COMPUTING என்றுபெயர். வருங்காலத்தில் இதற்கான தேவை அதிகமிருக்கும் என்பதால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த அடிப்படையில் ஐதராபாத் நகரத்தில் CLOUD மையத்தை அமைக்க MICROSOFT முடிவு செய்துள்ளது. இது கொல்கத்தாவில் உள்ள EDEN GARDEN கிரிக்கெட் மைதானத்தைவிட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
அமேசான், GOOGLE, MICROSOFT நிறுவனங்களின் பங்களிப்பால் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையங்களின் முனையமாக இந்தியா மாறும். AI, SERVER போன்ற சேவைகளுக்கு இந்திய கம்பெனிகள் வெளிநாட்டை எதிர்பார்க்கும் தேவை இருக்காது. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரம் பெருமளவு அதிகரிக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். வளர்ந்த தேசங்கள் என்றழைக்கப்படும் மேற்கத்திய நாடுகளைவிட இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் வல்லரசு நாடான அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான், GOOGLE மற்றும் MICROSOFT நிறுவனங்கள் இந்தியாவைத் தேடி வந்துள்ளன. அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே… அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டிலேயே முதலீடு செய்ய வேண்டும் என ட்ரம்ப் கூறிவரும் நிலையில் அங்குள்ள கம்பெனிகள் இந்தியாவை நாடி வந்திருக்கின்றன.
ரஷ்யாவிடம் மானிய விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்திய பொருட்களுக்கு 50 விழுக்காடு வரிவிதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மேலும் அண்மையில் நடைபெற்ற AI மாநாட்டில் பேசிய அவர், SILICON VALLEY தேசபக்தியோடும் நாட்டுப்பற்றோடும் செயல்பட்டு செயற்கை நுண்ணறிவு பந்தயத்தில் அமெரிக்கா வெற்றிபெற காரணமாக இருக்கவேண்டும் என்றார். அதைப்பொருட்படுத்தாமல் அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்கின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்தியாவில் செலவு குறைவு என்பதால் அதிக லாபமீட்ட வேண்டும் என்ற நோக்கில் அமேசான், GOOGLE மற்றும் MICROSOFT நிறுவனங்கள் டிஜிட்டல் காலனி ஆதிக்கத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் விமர்சித்துள்ளனர். மேலும் அந்த கம்பெனிகளை புறக்கணிக்க வேண்டுமென்றும் ட்ரம்ப் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
அதிக சம்பளம் வாங்கும் அமெரிக்கர்களை பணியிலிருந்து நீக்கிவிட்டு குறைந்த ஊதியத்துக்கு இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதாகவும் சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். எது எப்படி இருந்தாலும் 67 பில்லியன் டாலர் முதலீடு இந்தியாவுக்கு வரப்போவது உறுதி. அமெரிக்கா மட்டுமின்றி பிறநாட்டு நிறுவனங்களும் எதிர்காலத்தில் இந்தியாவில் முதலீடு செய்யும். அதன்மூலம் நம் நாட்டு கம்பெனிகளின் மதிப்பு உயரும். அது பங்குச்சந்தையிலும் எதிரொலித்து இந்தியாவின் பொருளாதாரத்தை மேலே கொண்டுசெல்லும். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயரும். விரைவில் டிஜிட்டல் உள்கட்டமைப்பிலும் பொருளாதாரத்திலும் தன்னிறைவை எட்டப்போகும் இந்தியா இருபத்தோறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழில்நுட்ப உலகை ஆளப்போகிறது.
















