அடுத்தவாரம் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ஓமன் நாட்டுக்குச் செல்கிறார். இந்தப் பயணம் புவிசார் அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வளைகுடாவைச் சேர்ந்த பெரும்பாலான அரச குடும்பங்கள் அனைத்தும் இந்தியாவுடன் வலிமையான தனிப்பட்ட உறவையும் ராஜ தொடர்பையும் கொண்டுள்ளன. இதில் ஓமன் மட்டும் விதிவிலக்கல்ல. இன்று நேற்றல்ல இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையேயான உறவு நீண்டகால பாரம்பரிய வரலாற்றைக் கொண்டதாகும். வளைகுடா நாடுகளிலேயே ஓமன் எப்போதுமே இந்தியாவின் பக்கமே நின்றுள்ளது. 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் போர் நடந்த நேரத்தில் வெளிப்படையாக இந்தியாவை ஆதரித்த ஒரே முஸ்லிம் பெரும்பான்மை நாடு ஓமன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியாவின் பாதுகாப்புப் படைகளின் மூன்று பிரிவுகளுடனும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் முதல் வளைகுடா நாடாகவும் ஓமன் உள்ளது. மறைந்த ஓமன் சுல்தான் கபூஸ் பின் சையத்தின் தாத்தா, ஒரு காலத்தில் இந்தியாவில் இருந்தபடியே ஓமன் நாட்டை ஆட்சி செய்திருக்கிறார். சுல்தான் கபூஸ் பின் சையத் பூனாவில் படிக்கும் காலத்தில், நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் மாணவராக இருந்தார். அதனால் தான் சங்கர் தயாள் சர்மா ஓமனுக்கு சென்றபோது, அவருக்கு அரண்மனையில் மிக உயரிய வரவேற்பு அளித்து மகிழ்ந்தார் சுல்தான் கபூஸ் பின் சையத். 2018ம் ஆண்டு, பிரதமர் மோடியின் ஓமன் பயணத்தின் போதும், அவருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
2018-19ம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகம் 5 பில்லியன் டாலரை எட்டியது. 2018 ஆம் ஆண்டில் ஓமனிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா இருந்தது. ஓமனில் 3,200 க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. 2023-24ம் ஆண்டில் 8.95 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த இருதரப்பு வர்த்தகம், 2024-25 ஆம் ஆண்டில் 10.61 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. பல நூற்றாண்டுகாலமாக வளர்ந்து வரும் இந்தியா-ஓமன் உறவுகளை நவீனகாலத்திலும் மேம்படுத்தியதில் சுல்தான் கபூஸ் பின் சையத் பங்கு மிக முக்கியமானது.
குறிப்பாக ஒரு காலத்தில், பலூசிஸ்தானின் குவாதரில் இருந்து கிழக்கு ஆப்பிரிக்காவின் சான்சிபார் வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஓமன், இப்பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்துக்கு உதவியாக இருந்து வருகிறது. ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து சுமார் 550 கிலோமீட்டர் தெற்கே உள்ள டக்ம் துறைமுகத்தை இந்தியா பயன்படுத்தவும் நிர்வாகிக்கவும் அனுமதி அளித்துள்ளது.
வளைகுடா நாடுகளிலேயே முதல் முறையாக இந்தியாவுடன் ஓமன் மேற்கொண்ட இந்த ஒப்பந்தம், இந்திய -பசிபிக் பிராந்தியத்தில் மேற்கு இந்தியப் பெருங்கடல், பாரசீக வளைகுடா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த உதவியுள்ளது. ஓமனின் நான்கு கடல் துறைமுகங்களிலும் தடையற்ற தொழில் மண்டலங்களை இந்தியா உருவாக்கி வருகிறது.
டுக்மில் உள்ள தொழில்துறை மண்டலங்கள் 30 ஆண்டு கார்ப்பரேட் வரி விலக்கு, பூஜ்ஜிய சுங்க வரி, 100 சதவீத வெளிநாட்டு உரிமை மற்றும் லாபத்தை முழுமையாகத் திருப்பி அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை இந்தியாவுக்கு ஓமன் வழங்கியுள்ளது. கூடுதலாக, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்குள் (OIC) பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினைகளில், எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாகவே ஓமன் உள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் வந்தபோது, UPI பணப் பரிவர்த்தனை, விண்வெளி ஆராய்ச்சி. சுகாதாரம். சுற்றுலா, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட 10 முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாக, அடுத்த வாரம் இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவுகளின் 70 ஆண்டுகள் நிறைவையொட்டி பிரதமர் மோடி ஓமனுக்குச் செல்லும் நிலையில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, 2022ம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அமெரிக்காவும் விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.
















