கலிபோர்னியா உள்ளிட்ட 18 மாகாணங்களின் வழக்கறிஞர்கள் அதிபர் ட்ரம்பின் எச்1-பி விசாக்களுக்கு 88 லட்சம் ரூபாய் கட்டணம் விதித்த உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஆட்சிக்கு வந்ததில் இருந்தே நாள்தோறும் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கடந்த செப்டம்பர் மாதம் H1B விசா விண்ணப்பக் கட்டணத்தையும் பன்மடங்கு உயர்த்தி உத்தரவிட்டார். H1B விசா வைத்திருப்பவரின் சராசரி ஆண்டு சம்பளத்தைவிட அதிகமாக விண்ணப்பக் கட்டணத்தை உயர்த்திய ட்ரம்ப் நிர்வாகம், அதிபரின் உத்தரவு, புதிய விசாக்களுக்கு மட்டுமின்றி, புதுப்பித்தலுக்கும் பொருந்தும் என்று கூறியிருந்தது.
மேலும், இந்தப் புதிய விதி கடந்த செப்டம்பர் 21ம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த விதி, அடுத்த 12 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று ட்ரம்ப் நிர்வாகக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருந்தது. சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதற்காக இந்த உத்தரவு அமல்படுத்தி இருப்பதாக ட்ரம்ப் அரசு கூறிவந்தாலும், அமெரிக்காவுக்கு வேலைக்குச் செல்லும் இந்தியர்களுக்கே கடுமையான பாதிப்பு என்று முன்னணி தொழில்நுட்ப மருத்துவ நிறுவனங்களே கவலை தெரிவித்திருந்தன.
இந்நிலையில் தான், கலிபோர்னியா மற்றும் 18 மாகாணங்களைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி வழக்கறிஞர்கள் ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது H-1B விசாக்களுக்கான புதிய கட்டணம் தொடர்பாக வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் கலிபோர்னியா மற்றும் மாசசூசெட்ஸ் மாகாணங்களின் அட்டர்னி ஜெனரல்களான போன்டா மற்றும் ஆண்ட்ரியா ஜாய் கேம்ப்பெல் ஆகியோர் மாகாணங்களின் கூட்டமைப்புக்குத் தலைமை ஏற்றுள்ளனர்.
இது H-1B விசா கட்டண உயர்வு தொடர்பாக ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிரான 49வது வழக்கு ஆகும். சான் பிரான்சிஸ்கோவில் செய்தியாளர்களைச் சந்தித்த கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் (Rob Bonta) ராப் போன்டா, புதிய விசா கட்டணத்தால் சுகாதார மையங்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மிகப்பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மற்ற மாகாணங்களைப் போலவே, கலிபோர்னியாவுக்கும் அதிக ஆசிரியர்கள், அதிக செவிலியர்கள், அதிக மருத்துவர்கள் தேவை என்ற நிலையில், தற்போதைய தொழிலாளர் பற்றாக்குறையை இந்த புதிய கட்டணம் மேலும் மோசமாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நாடு தழுவிய ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாகவும், கடந்த ஆண்டு, அமெரிக்காவின் மொத்த பள்ளி மாவட்டங்களில் 74 சதவீதம் சிறப்பு கல்வி, வெளிநாட்டு மொழி மற்றும் STEM எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கிட்டத்தட்ட 30,000 கல்வியாளர்கள் மட்டுமே H-1B விசாக்களை வைத்துள்ளனர் என்று குறிப்பிட்ட (Rob Bonta) ராப் போன்டா, நூற்றுக்கணக்கான கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் கற்பிக்கவும் ஆராய்ச்சி செய்யவும் வெளிநாட்டு ஆசிரியர்களையே நம்பியுள்ளன” என்றும் கூறியுள்ளார். மிகவும் குறைந்த வரவுசெலவுத் திட்டத்தில் இயங்கும் பல பொதுப் பள்ளிகளால் புதிய விசா கட்டணத்தைச் செலுத்தி ஆசிரியர்களைப் பணியமர்த்தும் கூடுதல் செலவை ஏற்றுக்கொண்டு சமாளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற அமெரிக்காவில் பல மாகாணங்களில் சுகாதாரத் துறையும் ஆபத்தில் உள்ளதாக தெரிவித்த (Rob Bonta) ராப் போன்டா சுகாதார பணியாளர்கள் கிடைக்காமல் மக்களின் ஆரோக்கியம் வெகுவாக பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த புதிய H-1B விசா கட்டணம் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தையும், நிர்வாக நடைமுறைச் சட்டத்தின் அறிவிப்பு மற்றும் கருத்து தெரிவிக்கும் செயல்முறையையும் மீறியுள்ளதாக கூறிய ராப் போன்டா, செயலாக்கச் செலவுகளை விட இது மிக அதிகமான கட்டணம் என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.
அமெரிக்காவுக்குத் தேவையான திறமையான தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கு இந்த புதிய விசா கட்டணம் தேவையற்ற தடையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க காங்கிரஸ் அதிகாரம் அளிக்காத நிலையில் H-1B விசா கட்டணத்தை உயர்த்தியுள்ள அதிபர் ட்ரம்ப்,தனது தன்னிச்சையான நடவடிக்கையால், நாட்டின் கல்வி நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளைச் சீர் குலைத்து விட்டதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.
எந்தவொரு அதிபரும் குடியேற்றச் சட்டத்தை மீண்டும் திருத்தி எழுத முடியாது என்றும், காங்கிரஸையோ, அரசியலமைப்பையோ சட்டத்தையோ புறக்கணிக்கவும் முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்பின் உத்தரவுகளுக்கு நாடு தழுவிய எதிர்ப்பும், வழக்கும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. இது அமெரிக்காவின் முன்னேற்றத்தையே முடக்கும் என்று பொருளாதார அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
















