மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடி உள்ளதால் ஒரு கோடி வாக்காளர்களை மீண்டும் சரிபார்க்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில், மேற்குவங்க மாநிலத்தில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து முடிந்துள்ளதாகவும், எஸ்ஐஆர் பணியின்போது சமர்ப்பிக்கப்பட்ட படிவங்கள், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பல விண்ணப்ப படிவங்களில் குளறுபடிகள் உள்ளதால், வயது வித்தியாசம், உறவுமுறையில் மாற்றம் உள்ளிட்டவற்றை சரிபார்க்க முடிவு செய்துள்ளதாகவும், மாநிலத்தில் உள்ள 57 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் குறித்த விவரங்கள் கண்டறிய முடியாதவையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் 24 லட்சத்து 14 பேர் தற்போது உயிருடன் இல்லை என்றும், 11 லட்சத்து 57 ஆயிரம் பேரின் விலாசம் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குளறுபடிகள் ஏற்பட்ட வாக்காளர்களின் வீடு வீடாகச் சென்று சரிபார்க்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், உரிய ஆவணங்களை அளிக்கும் வாக்காளர்களின் பெயர்களை உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
















