கேரளாவில் வக்ஃபு நில விவகாரத்தை மையமாக வைத்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், NDA கூட்டணி சர்ச்சைக்குரிய முனம்பம் வார்டில் முக்கிய அரசியல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள கடற்கரை பகுதியான முனம்பம் வார்டில், கடந்த 2019-ம் ஆண்டு நில உரிமைக்கான சர்ச்சை தொடங்கியது. அந்தச் சமயத்தில் கேரள வக்ஃபு வாரியம் முனம்பம் மற்றும் அதன் அருகிலிருந்த சேரை பகுதிகளில் உள்ள சுமார் 404 ஏக்கர் நிலத்தை, வக்ஃபு சொத்தாக அறிவித்ததே இந்தச் சர்ச்சைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இதனால் அங்குப் பல தலைமுறைகளாக வசித்த லத்தீன் கத்தோலிக் மீனவர் சமூகத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படுவோமா என்ற அச்சத்தில் ஆழ்ந்தனர். அப்போது தங்களிடம் சட்டப்பூர்வமான நிலப் பத்திரங்களும், வரி செலுத்தியதற்கான ரசீதுகளும் இருப்பதாக அவர்கள் கூறிய நிலையில், அப்பகுதியில் நில வரி வசூலிப்பதை நிறுத்தி அரசு மேலும் குழப்பத்தை அதிகரித்தது. அதன் பின்னர் இதனை எதிர்த்து 400 நாட்களுக்கு மேலாக முனம்பம் பகுதி மக்கள் பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பு வழக்கிய கேரள உயர்நீதிமன்றம், முனம்பம் விவகாரத்தில் தேவையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதையும் எடுத்துரைத்ததுடன், வக்ஃபு வாரியத்தின் அறிவிப்புத் தவறு எனவும் சுட்டிக்காட்டியது. இருப்பினும் அந்தத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் விதித்த இடைக்கால தடையால், முனம்பம் பகுதியின் சட்டநிலை இன்னும் தீர்மானிக்கப்படாமல் உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி முனம்பம் வார்டில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இப்பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பாஜக வெளிப்படையாகத் தனது ஆதரவை தெரிவித்தது.
இதனால் இதற்கு முன்புவரை காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு ஆதரவாக இருந்த சில வாக்காளர்கள், தற்போது NDA கூட்டணிக்கு ஆதரவாகத் திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆயிரத்து 780 வாக்காளர்கள் உள்ள முனம்பம் வார்டில், காங்கிரஸிடம் இருந்த இடத்தை NDA கூட்டணி கைப்பற்றி இருப்பது அம்மாநில அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தாங்களும் முனம்பம் பகுதி மக்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி வாதிட்டு வருவது ஒருபுறமிருக்க, மற்றொருபுறம் இந்தத் தேர்தல் முடிவு கேரளாவில் பாஜக-விற்கு கிடைத்த முக்கிய அங்கீகாரமாகவும், வரவுள்ள சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ளப் பெரும் ஊக்கமாகவும் பார்க்கப்படுகிறது.
















