தமிழகத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்களில், ஒதுக்கீட்டாளர்களிடமிருந்து கைமாறிய மனைகளுக்கு, விலை நிர்ணயிப்பதில், 25 ஆண்டுகளாக முடிவு எடுக்கப்படாமல் உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்களில், குத்தகை மற்றும் விற்பனை என்ற அடிப்படையில் தமிழகம் முழுதும், 489 இடங்களில் 93 ஆயிரம் மனைகள் மக்களுக்கு ஒதுக்கப்பட்டன.
மனை ஒதுக்கீடு பெற்றவர்கள் முறையாகத் தவணை தொகையை செலுத்தி விற்பனை பத்திரம் பெறாமல், பலர் தங்களது வறுமை சூழல் காரணமாக, மனைகளை வெளியாட்களுக்கு விற்பனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் ஒதுக்கீட்டாளர் அல்லாத வெளியாட்கள் குறித்து, 2023ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 55 ஆயிரம் பேர் முறையான பத்திரம், ஒதுக்கீட்டு ஆணை இல்லாமல், மனைகளில் வசித்து வருவது தெரியவந்துள்ளது.
இவ்வாறு மனை வாங்கியோர், தங்கள் பெயரில் விற்பனை பத்திரம் கேட்டு வரும்போது பிரச்னை ஏற்படுகிறது.
ஒதுக்கீட்டாளர் அல்லாத வெளியாட்கள் பெயருக்கு, விற்பனை பத்திரம் கொடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
25 ஆண்டுகளாக இந்த விஷயத்தில் வாரிய அதிகாரிகளும், அரசும் எந்த முடிவையும் எடுக்காததால், இதுதொடர்பான கோப்புகள் அரசிடம் நிலுவையில் உள்ளன.
















