இந்திய பயணத்தின் 2ம் நாளில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் மெஸ்ஸி கலந்துகொண்டார். அதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
GOAT TOUR OF INDIA 2025 என்ற பெயரில் கால்பந்தாட்ட ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வந்துள்ளார். முதல் நாள் கொல்கத்தா சென்ற அவர், அங்குத் தனது 70 அடி உயர சிலையை தொடங்கி வைத்தார். அங்கிருந்து ஹைதராபாத் சென்ற அவர், தெலங்கானா முதலமைச்சருடன் கால்பந்து விளையாடினார். பயணத்திட்டத்தின் 2ம் நாள் அவர் மும்பை சென்றார். புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர்களான லூயிஸ் சுவாரஸ், ரோட்ரிகோ டி பால் ஆகியோரும் உடன் சென்றார்.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து போட்டி நடைபெற்றது. அதனை பார்வையிட்ட மெஸ்ஸி, கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளுடன் இணைந்து கால்பந்து விளையாடி மகிழ்ந்தார். அதனை தொடர்ந்து மைதானத்தில் வலம் வந்த மெஸ்ஸி, பார்வையாளர்கள் பகுதிகளில் அமர்ந்திருந்த ரசிகர்களை நோக்கி, கால்பந்துகளை வீசினார். அந்த பந்துகளை பெற்ற ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
வான்கடே நிகழ்வில் பங்கேற்ற சச்சின் தெண்டுல்கர், மெஸ்ஸியை வரவேற்றார். அப்போது, தனது ஜெர்ஸியை மெஸ்ஸிக்கு அவர் பரிசாக வழங்கினார். அந்த ஜெர்ஸி, 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது சச்சின் அணிந்திருந்ததாகும். பதிலுக்கு, கால்பந்து ஒன்றை சச்சினுக்கு மெஸ்ஸி பரிசாக வழங்கினார்.
கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் கால்பந்தாட்ட ஜாம்பவான் இடையேயான இந்தச் சந்திப்பின்போது, ரசிகர்கள் உற்சாகக் குரலெழுப்பினர். அப்போது பேசிய சச்சின், மெஸ்ஸி மும்பைக்கு வந்திருப்பது பொன்னான தருணம் எனவும், அவர் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, பணிவு ஆகியவற்றால் தாங்கள் கவரப்பட்டதாகவும் கூறினார்.
இதனை தொடர்ந்து, இந்திய கால்பந்தாட்ட வீரர் சுனில் சேத்ரி மெஸ்ஸியை சந்தித்தார். அப்போது தான் கையெழுத்திட்ட அர்ஜெண்டினா ஜெர்ஸியை, மெஸ்ஸி சுனில் சேத்ரிக்கு வழங்கினார். அப்போது, ரசிகர்கள் GOAT meets GOAT எனக் கோஷம் எழுப்பினர்.
பின்னர், மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மெஸ்ஸி உள்ளிட்ட அனைவரும் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
அப்போது பேசிய ஃபட்னாவிஸ், இங்குள்ள அனைவரும் மெஸ்ஸியால் இன்ஸ்பையர் ஆகியுள்ளதாகவும், தங்கள் வீரர்களும் விரைவில் ஃபிஃபா கால்பந்து போட்டியில் விளையாடுவார்கள் எனவும் கூறினார். இதனையடுத்து வான்கடே நிகழ்வு நிறைவடைந்தது.
















