ஆஸ்திரேலியாவின் சிட்னியின் போண்டி கடற்கரையில் யூதர்களுக்கு எதிராகக் கொடூரத் துப்பாக்கிச் சூடு நடத்தியது பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும், மகனும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றான ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும்பாலும் நடப்பதில்லை. 1996-ஆம் ஆண்டு தெற்குத் தீவு மாநிலமான டாஸ்மேனியாவில் உள்ள போர்ட் ஆர்தர் சுற்றுலாத் தளத்தில் 35 பேரை ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொன்ற சம்பவத்துக்குப் பிறகு மீண்டும் பொது இடத்தில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தத் தொடங்கியதில் இருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்கள், கட்டிடங்கள் மற்றும் யூதர்களின் கார்கள் மீது எதிர்ப்புத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
பாலஸ்தீனத்துக்கு ஆஸ்திரேலியா அளிக்கும் ஆதரவு, நாட்டில் யூத-எதிர்ப்பைத் தூண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீஸை ஏற்கெனவே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்திருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை யூதர்கள் மீதான தாக்குதல் மிகப் பெரிய அளவில் நடந்துள்ளது. 1000-க்கும் மேற்பட்ட மக்கள் சிட்னியில் போண்டா கடற்கரையில் உற்சாகமாகக் கூடியிருந்தனர்.
கடற்கரைக்குப் பின்னாலிருந்த சிறிய பூங்காவில் நூற்றுக்கணக்கான யூதர்கள் எட்டு நாள் ஹனுக்கா பண்டிகையின் தொடக்கத்தை வரவேற்கும் (Chanukah by the Sea) ‘ஹனுக்கா பை தி சீ’ நிகழ்ச்சியைக் கொண்டாடி கொண்டிருந்தனர். கூட்டத்தில் திடீரெனப் புகுந்த இரண்டு பேர் கண்மூடித்தனமாகக் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சுட்டுத் தள்ளினார்கள். சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 10 வயது சிறுமி உள்பட 15 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
படுகாயமடைந்த 42க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். பட்டாசு சத்தம் போல் தொடர்ந்து கேட்ட துப்பாக்கிச் சத்தத்தில் பயந்த நூற்றுக்கணக்கான மக்கள் மணல் பரப்பிலும் அருகிலுள்ள தெருக்களிலும் சிதறி ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கருப்புச் சட்டை அணிந்த இரண்டு பேர் கடற்கரைக்குச் செல்லும் ஒரு நடைபாதை மேம்பாலத்தில் இருந்து போல்ட்-ஆக்சன் துப்பாக்கி மற்றும் ஒரு ஷாட்கன் போன்ற துப்பாக்கிகளால் சுடுவதும் வீடியோ காட்சிகளில் தெளிவாக தெரிகின்றன.
இந்த பரபரப்பிலும் பழக்கடை உரிமையாளரான அகமது அல் அகமது என்பவர், மக்களை காப்பாற்றும் முயற்சியில் துப்பாக்கியால் சுடும் நபரை மடக்கிப் பிடித்து துப்பாக்கியைப் பிடுங்கும் காட்சி வெளியானது. “உண்மையான ஹீரோ” என்று நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் கிறிஸ் மின்ஸ் பாராட்டியுள்ள நிலையில், அகமது அல் அகமதுவுக்காக உடனடியாக தொடங்கப்பட்ட நிதி திரட்டும் பக்கத்தில் 24 மணி நேரத்துக்குள் 1,33,000 அமெரிக்க டாலருக்கும் மேல் நிதி குவிந்துள்ளது.
மேலும், ஆஸ்திரேலியாவில் இனவெறி அல்லது யூத வெறுப்புக்கு எதிரான கடுமையான சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்றும் மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 50 வயதான சஜித் அக்ரம் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். படுகாயமடைந்த இன்னொரு குற்றவாளியான சஜித் அக்ரத்தின்மகன் 24 வயதான நவீத் அக்ரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் சஜித் அக்ரமின் நியூ சவுத் வேல்ஸ் ஓட்டுநர் உரிமத்தின் புகைப்படத்தில் அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை அணிந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1998-ல் மாணவர் விசாவில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த சஜித் அக்ரம், அதை 2001-ல் பார்ட்னர் விசாவாகவும், பின்னர் resident return விசாகவும் மாற்றியுள்ளார் என்று ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் Tony Burke டோனி பர்க் கூறியுள்ளார்.
HUNT மற்றும் GUN கிளப்பில் உறுப்பினராக உள்ள சஜித் அக்ரம் உரிமம் பெற்ற தனது ஆறு துப்பாக்கிகளையும் சம்பவத்தன்று கடற்கரைக்குக் கொண்டு சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. போண்டி கடற்கரை அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் வெடி பொருட்களையும் வெடிக்கச் செய்யும் கருவிகளையும் கண்டுபிடித்துள்ள காவல்துறை இந்த பயங்கரவாத தாக்குதலில் மூன்றாவது நபரும் இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
போனிரிக் நகரில் உள்ள குற்றவாளிகளின் வீட்டில் சோதனையை மேற்கொண்ட காவல் துறையினர் நவீத் அக்ரமின் தாயார் வெரீனாவிடம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், நியூ சவுத் வேல்ஸின் புறநகர்ப் பகுதியான கேம்ப்சியில் தந்தையும் மகனும் குறுகிய காலமாக தங்கியிருந்த வாடகை வீட்டிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். நியூ சவுத் வேல்ஸில் அரபு மற்றும் குர்ஆனைக் கற்றுக் கொடுக்கும் அல்-முராத் நிறுவனத்தின் முன்னாள் மாணவரான நவீத் அக்ரம், அந்நிறுவன உரிமையாளர் இஸ்மாயிலுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.
விசாரணையில் 2022ம் ஆண்டுக்குப் பிறகு அக்ரமையோ அவரது குடும்பத்தினரையோ தொடர்பு கொள்ளவில்லை என்று இஸ்மாயில் கூறியுள்ளார். தேசத்தின் இதயத்தைத் தாக்கிய தீய யூத எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத செயல் எனக் குறிப்பிட்டுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீசி, நாடு யூதர்களுடன் நிற்கிறது என்றும், யூத-எதிர்ப்பை வேரறுக்கத் தேவையான அனைத்தையும் ஆஸ்திரேலியா செய்யும் என்றும் உறுதியளித்துள்ளார்.
போண்டி கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை யூதர்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் என்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கண்டித்துள்ள நிலையில், தீபத் திருவிழாவான ஹனுக்கா, நம்ப முடியாத அளவுக்கு இருள் சூழந்துள்ளது என்று இஸ்ரேலிய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும், வெறுமனே ஒற்றுமையை வெளிப்படுத்துவது மட்டும் போதாது என்றும், யூத எதிர்ப்பு வன்முறையில் இருந்து யூத உயிர்களைப் பாதுகாக்க உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை ஆஸ்திரேலிய அரசு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
















