கோவையை போன்று ஸ்ரீவைகுண்டம் அருகே அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண், கணவர் கண்ணெதிரே 3 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அசாமைச் சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்குச் சேர்ந்துள்ளனர்.
நெல்லையைச் சேர்ந்த முகமது மஹ்புல் ஹுசைன் என்பவர் கல்குவாரி உரிமையாளரிடம் கமிஷன் தொகை பெற்று கொண்டு தம்பதியை வேலைக்குச் சேர்த்திருந்தார். ஆனால் அங்கு, போதிய அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி பணியில் இருந்து விலகுவதாக தம்பதி கூறியுள்ளனர்.
இருவரும் கேரளாவில் வேலைக்குச் செல்வதற்காக அரசர்குளத்தில் இருந்து நெல்லைக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். அப்போது தம்பதியைச் செல்போனில் தொடர்பு கொண்ட முகமது ஹுசைன், கல்குவாரியில் வேலை செய்யுமாறு மிரட்டியதோடு, இது தொடர்பாகப் பேச்சுவார்த்தைக்கும் அழைத்துள்ளார்.
அவர்கள் வர மறுக்கவே சிவந்திபட்டியில் ஆட்டோவைத் தடுத்தி நிறுத்திய முகமது ஹுசைன், தம்பதியை இளம் சிறார்களுடன் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், இருவரையும் தாக்கிய முகமது ஹுசைன், கணவர் கண்ணெதிரிலேயே 3 பேரும் சேர்ந்தும் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















