அக்டோபரில் ஏற்பட்ட கடும் சரிவுக்குப் பிறகு, பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி நவம்பரில் மீண்டும் உயர்ந்துள்ளதாக இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு அபராதம் எனக்கூறி, இந்திய பொருட்களுக்கு டிரம்ப் நிர்வாகம் ஐம்பது சதவீத வரி விதித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் ஏற்றுமதி பரவலாக வீழ்ச்சியை சந்தித்தது.
அதனைத் தொடர்ந்து, இந்திய-அமெரிக்க வர்த்தக உறவை மீண்டும் பலப்படுத்த இருநாடுகளும் தங்களால் ஆன முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், தற்போது பொறியியல் ஏற்றுமதியானது மீண்டு வருவதாக இந்திய பொறியியல் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் பங்கஜ் சாதா தெரிவித்துள்ளார்.
பொறியியல் பொருட்களின் ஏற்றுமதி கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 8 புள்ளி 9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான பொறியியல் ஏற்றுமதி, 4 புள்ளி 25 சதவீதம் அதிகரித்து 79 புள்ளி 74 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது என்றும் பங்கஜ் சாதா கூறியுள்ளார்.
இது இந்திய பொறியியல் துறையின் மீள்தன்மையையும், உலகளாவிய வர்த்தக சூழலுக்கு மாற்றியமைக்கும் இந்தியாவின் திறனையும் பிரதிபலிப்பதாக பங்கஜ் சாதா தெரிவித்துள்ளார்.
















