சென்னைப் பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் மக்களால் 35 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட நூலகம் இன்றோ பரிதாப நிலையில் பரிதவித்துக் கொண்டிருக்கிறது… இந்த நிலை ஏற்பட்டது எப்படி?என்பதை விவரிக்கிறது இந்தச் செய்தித்தொகுப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொழிச்சலூரில் அமைந்திருக்கிறது இந்த நூலகம்… 1988ம் ஆண்டு பொழிச்சலூர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், அப்பகுதி மக்களின் அறிவுத்திறனை வளர்க்க நூலகம் அமைக்கப்பட்டது.
ஊராட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட 10 சென்ட் நிலத்தில், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் நிறுவப்பட்ட நூலகத்தை இப்போதும் நூற்றுக்கும் மேற்பட்டார் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் பெய்த மழையால் நூலகத்திற்குள் தண்ணீர் புகுந்ததோடு, கட்டடம் முழுவதும் மழைநீர் கசிந்து புத்தகங்கள் வீணாகும் சூழல் உருவாகியுள்ளது.
ஆசை ஆசையாய் நூலகத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசு கட்டடங்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் ஆயிரம் சதுரடியில் நவீன நூலகத்தைக் கட்டித்தர வேண்டும் எனக் கடந்த 6 ஆண்டுகாளாக வாசகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் அதற்கான பதில்தான் இன்னும் கிடைக்கவில்லை என்கிறார்கள் இவர்கள்.
திமுக அரசு விளம்பரத்திற்காக வீணடிக்கும் மக்களின் வரிப்பணத்தை, ஆபத்தான நிலையில் உள்ள நூலகங்களை சீரமைக்க பயன்படுத்த வேண்டும் என்றும், பொழிச்சலூர் நூலகத்தை நவீன வசதிகளுடன் கூடிய நூலகமாக மாற்றித் தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
















