உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாகப் பாகிஸ்தான் உள்ளது என்று மீண்டும் ஐநா சபையில் வலியுறுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தானின் ஜம்மு காஷ்மீர் கோரிக்கையை நிராகரித்த இந்தியா, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக், ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாக முன்பு இருந்தன, இப்போது இருக்கின்றன, எப்போதும் அப்படியே இருக்கும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த திங்கட்கிழமை ஐநா பாதுகாப்பு சபையின் “அமைதிக்கான தலைமைத்துவம்” குறித்த சிறப்பு விவாதத்தில், உரையாற்றிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி, தூதர் ஹரீஷ் பர்வதனேனி,பாகிஸ்தான் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப் புள்ளியாக இருக்கும் பாகிஸ்தான், இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதற்காக எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தைத் தூண்டுகிறது என்றும், அதற்காக பாதுகாப்பு சபையின் நிரந்தரமற்ற உறுப்பினராக இருந்து கொண்டு பிளவுபடுத்தும் சதிக்கு ஐ.நா. சபையைப் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் வைத்த கருத்துக்களை முற்றிலுமாக மறுத்த ஹரீஷ் பர்வதனேனி அவையெல்லாம் ஆதாரமற்றவை மற்றும் தேவையற்றவை என்று நிராகரித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்துவரும் பாகிஸ்தானின் நீண்டகால வரலாற்றை விவரித்த இந்திய தூதர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான சரியான காரணத்தையும் விவரித்துள்ளார். 65 ஆண்டுகளுக்கு முன்பு நல்லெண்ணத்துடன் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட போதிலும் பாகிஸ்தான் இந்தியா மீது மூன்று போர்களைத் தொடுத்தது என்றும், தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியது என்றும், பாகிஸ்தானின் பயங்கரவாதத்தில் பல்லாயிரக் கணக்கான இந்திய மக்கள் பலியாகியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் மற்றும் பிற அனைத்து வகையான பயங்கரவாதத்துக்கும் பாகிஸ்தான் தந்து கொண்டிருக்கும் ஆதரவை முடிவுக்குக் கொண்டு வரும் வரை, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாகவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இம்ரான் கானைச் சிறையில் அடைத்தது;அவரது கட்சிக்குத் தடை விதித்தது; 27வது சட்ட திருத்தத்தின் மூலம் ஒரு “அரசியலமைப்பு சதி” அரங்கேற்றியது; அதன் வழியாக அசிம் முனீரைப் பாதுகாப்புப் படைத் தலைவராக்கியது மற்றும் அசிம் முனீருக்கு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு வழங்கியது ஆகியவற்றைக் குறிப்பிட்ட ஹரீஷ் பர்வதனேனி, மக்கள் ஜனநாயகத்தைக் குழி தோண்டி புதைத்த பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியல் குழப்பங்களையும் எடுத்துரைத்தார்.
மேலும், அடியலா சிறையில் இம்ரான் கானுக்கு இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனிதாபிமானமற்ற சிகிச்சை மற்றும் சித்ரவதைத் தொடர்பாக ஐ.நா. சிறப்பு பதிவாளர் (Alice Jill Edwards) ஆலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் எழுப்பிய கேள்விகளையும் ஹரீஷ் பர்வதனேனி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை மேற்கோள் காட்டி, தாத்தா பாட்டிகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகளைக் கொண்டு, பேரக்குழந்தைகளுக்குப் பொருத்தமான எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்று கூறிய ஹரீஷ் பர்வதனேனி, ஐநா சபையின் அவசரச் சீர்திருத்தத்தின் தேவையையும் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானால் தூண்டப்படும் பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் வெளிப்பாடுகளையும் இந்தியா தனது முழு பலத்துடன் எதிர்கொள்ளும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அழுத்தமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















