இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 16-ம் தேதி ‘விஜய் திவஸ்’ எனக் கொண்டாடப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன என்பது குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த 1971-ம் ஆண்டு நடந்த போர், இந்திய ராணுவத்தின் வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் முடிவடைந்த போராகவும், இந்தியாவிற்கு ஒரு தீர்க்கமான வெற்றியைத் தந்த போராகவும் பார்க்கப்படுகிறது. இந்தப் போர் முடிவடைந்த டிசம்பர் 16-ம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த 93 ஆயிரம் ராணுவத்தினர் இந்தியாவிடம் சரணடைந்தனர். இந்திய ராணுவம் பெற்ற இந்த வெற்றியின் பலனாகக் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசம் என்ற புதிய நாடாக உருவானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி நமக்கு அத்தனை எளிதாகக் கிடைத்துவிடவில்லை. அதற்குப் பின்னால் பல துணிச்சல்மிக்க ராணுவ வீரர்களின் மாபெரும் பங்களிப்பு இருந்தது.
சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் இந்தியாவின் உளவுத்துறை, தேசபக்தி மற்றும் ராணுவத்தின் அதிரடி நடவடிக்கைகள் குறித்து ஆழமாகப் பேசியுள்ள நிலையில், 1971-ம் ஆண்டு நடந்த போரின்போதும் இதேபோன்ற பல துரந்தர்கள் இந்தியாவின் வெற்றிக்காகத் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர் என்பதையும் நாம் நினைவுகூர வேண்டிய அவசியம் உள்ளது. அத்தகையவர்களுள் முக்கியமானவர் லெஃப்டினண்ட் கர்னல் பவானி சிங். இவரது தலைமையிலான ஒரு சிறிய படைப்பிரிவே, பாகிஸ்தானுக்குள் சுமார் 80 கிலோ மீட்டர் வரை நுழைந்து, 20 பாகிஸ்தான் வீரர்களைச் சிறைபிடித்து இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளமிட்டது.
நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு முனைகளில் மொத்தமாக வெறும் 13 நாட்களே நடைபெற்ற இந்தப் போரில், டிசம்பர் 3-ம் தேதி பாகிஸ்தான் விமானப்படை இந்தியாவின் விமான நிலையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. அதற்கு எதிர்வினையாற்றிய இந்தியா முழுமையாகப் போரில் இறங்கியது. அதன் விளைவாகக் கிழக்கு பாகிஸ்தானில் இந்திய படைகள் அதிரடி முன்னேற்றத்தைக் கண்டன. இந்த மொத்த போருக்கும் திட்டமிட்டு வடிவமைத்தவர்தான் ஃபீல்டு மார்ஷல் சாம் மானேக்ஷா. அவரது துணிச்சல் மற்றும் துல்லியமான ராணுவ தந்திரங்கள், இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத்தந்தது. அவரது வாழ்க்கை அண்மையில் ‘சாம் பஹதூர்’ என்ற திரைப்படமாக வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதேபோல, கிழக்கு பாகிஸ்தானில் 4-ம் படைப்பிரிவை வழிநடத்திய ஜென்ரல் சாகச் சிங்கும் இந்திய வெற்றிக்குப் பெரும் பங்காற்றியிருந்தார். போரின்போது தலைமையின் கட்டளைகளை ஏற்க மறுத்த அவர், தனது படைகளுடன் ஹெலிகாப்டர்கள் மூலம் மேக்னா ஆற்றைக் கடந்து பாகிஸ்தானின் பாதுகாப்பு கட்டமைப்பைச் சீர்குலைத்தார். இதனால் வெறும் 36 மணி நேரத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் வான்வழியாக எதிரி நாட்டிற்குள் நுழைந்தனர்.
இந்தத் திடீர் தாக்குதல் பாகிஸ்தான் படைகளை நிலைகுலையச் செய்தது. இந்தப் போரின் இறுதி கட்டத்தில் வெறும் 21 வயதேயான 2-ம் லெஃப்டினண்டான அருண் கேதர்பால், தனது உயிரைத் தியாகம் செய்து எதிரி நாட்டின் பல டாங்கிகளை அழித்து பாகிஸ்தானின் முன்னேற்றத்தைத் தடுத்தார். படுகாயமடைந்தபோதும் போர்க்களத்தை விட்டு வெளியேற மறுத்த அவரது வீரச்செயல், இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அதே நேரத்தில் கிழக்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தளபதியாக இருந்த லெஃப்டினண்ட் ஜெனரல் ஜக்ஜித் சிங் அரோரா, டாக்கா நகரை 4 திசைகளிலும் முற்றுகையிட்டுப் பாகிஸ்தான் படைகளைச் சரணடைய வைத்தார். பாகிஸ்தான் தளபதி நியாஸி சரணடைந்த ஆவணத்தில் கையெழுத்திட்டபோது, அருகில் அமர்ந்திருந்த இந்திய தளபதியும் அவரே.
இப்படி 1971-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி, இந்திய ராணுவத்தின் வலிமையையும், நமது வீரர்களின் தியாகத்தையும் உலகிற்கு எடுத்துச் சொன்ன நாளாக அமைந்தது. அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளை ஆண்டுதோறும் இந்தியா ‘விஜய் திவஸ்’ என்ற பெயரில் கொண்டாடி, உயிர்நீத்த வீரர்களின் தியாகங்களையும் நினைவுகூர்ந்து வருகிறது.
















