பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானில் இருந்து திட்டமிடப்பட்ட எல்லைத் தாண்டிய பங்கரவாத சதி எனத் தேசிய புலனாய்வு முகமையின் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து 597 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா உள்ளிட்ட 7 குற்றவாளிகளின் பங்கு வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில், 25 சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர்க் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பயங்கரவாத தடுப்பு புலனாய்வு அமைப்பான NIA விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பான விரிவான குற்றப்பத்திரிக்கையை NIA அமைப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஆயிரத்து 597 பக்கங்கள் கொண்ட அந்தக் குற்றப்பத்திரிக்கையில், இந்தத் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து திட்டமிடப்பட்ட எல்லைத் தாண்டிய பயங்கரவாத சதி என NIA குறிப்பிட்டுள்ளது.
மேலும், லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் அதன் பிரதிநிதி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) இணைந்து இந்தத் தாக்குதலை செயல்படுத்தியுள்ளதாகவும் NIA அமைப்பு தெரிவித்துள்ளது. மத மோதலை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்டதாகவும், இதில் ஈடுபட்ட மூன்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பின்னர் இந்திய பாதுகாப்புப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகை விளக்குகிறது.
பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக மொத்தம் 7 பேர் மீது NIA குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாகப் பாகிஸ்தானில் இருந்து தாக்குதலைக் கையாண்டவர்கள், தாக்குதலை நேரடியாக நடத்திய 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள், தடைச் செய்யப்பட்ட லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பு, அதன் பிரதிநிதி அமைப்பான The Resistance Front மற்றும் அவர்களுக்கு அடைக்கலமும், உதவியும் வழங்கிய இரு உள்ளூர் நபர்கள் இதில் அடங்குவர். பஹல்காம் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டதாக சாஜித் ஜட் எனப்படும் ஹபிபுல்லா மாலிக் அடையாளம் காணப்பட்டுள்ளார். இஸ்லாமாபாத்தில் இருந்து செயல்பட்டு வரும் அவர், பாகிஸ்தானின் ISI அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது.
லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் மூத்த தளபதிகளுள் ஒருவரான சாஜித் ஜட், The Resistance Front அமைப்பின் நடவடிக்கைகளைக் காஷ்மீரில் வழிநடத்துபவர் என்றும் NIA தங்கள் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய ஃபைசல் ஜட், ஹபீப் தாஹிர் மற்றும் ஹம்சா அஃப்கானி ஆகிய மூவரும், ஸ்ரீநகரின் டாசிகாம் வனப்பகுதியில் கடந்த ஜூலை 29-ம் தேதி நடந்த ‘ஆப்ரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பாகிஸ்தானில் வாங்கப்பட்ட ஆண்ட்ராய்டு கைபேசிகள், அவர்களின் பாகிஸ்தான் தொடர்பை உறுதிபடுத்தும் முக்கிய ஆதாரமாக உள்ளதாகவும் NIA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஃபர்வைஸ் அகமது மற்றும் பஷீர் அகமது ஜோத்தார் ஆகிய இரு உள்ளூர்வாசிகள், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாகப் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் The Resistance Front அமைப்புகள் சட்டரீதியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது இந்த வழக்கில் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படும் நிலையில், லஷ்கர்-ஏ-தொய்பா மீது ஒரு நாட்டின் புலனாய்வு அமைப்பு நேரடியாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது இதுவே முதல் முறை.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைத் தொடர்ந்து நடைபெற்று வருவதாக NIA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஆதாரங்கள் மற்றும் நிதி தொடர்புகள் தொடர்பான ஆவணங்களும் வெளிவர வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
















