எத்தியோப்பியா சிறந்த வரலாறு மற்றும் கலாசாரத்தைக் கொண்ட ஒரு நாடு எனவும் இந்தியாவும் எத்தியோப்பியாவும் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளன என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலியின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக அந்நாட்டிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து அடிஸ் அபாபா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலி ஆரத்தழுவி வரவேற்றார். மேலும் விமான நிலையத்தில் இந்திய இசையுடன் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.’
பின்னர் எத்தியோப்பியாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பிரதமர் மோடி அவர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து அடிஸ் அபாபாவில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்தையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது அவருடன் எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது அலியும் உடனிருந்தார்.
இதையடுத்து பிரதமர் மோடி எத்தியோப்பியா அரண்மனைக்கு சென்றார். அங்கு அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. மிடுக்கான அணிவகுபுடன் எத்தியோப்பிய ராணுவத்தினர் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து அரண்மனையில் பிரதமர் மோடி மற்றும் எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது அலி முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டன.
இது தொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மறக்க முடியாத வரவேற்பளித்த எத்யோப்பியாவிற்கு நன்றி என கூறியுள்ளார்.
எத்தியோப்பியா சிறந்த வரலாறு மற்றும் கலாசாரத்தைக் கொண்ட ஒரு நாடு. இந்தியாவும் எத்தியோப்பியாவும் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளன.
பல்வேறு துறைகளில் நமது உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்நோக்குகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் எத்தியோப்பியாவின் நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றும் பிரதமர் மோடி, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் டாக்டர் அபி அகமது அலியுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கு கிடைக்க பெற்ற 28-வது உயரிய விருது என்பது குறிப்பிடத்தக்கது.
















