அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை 25 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது.
2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் மினி ஏலம், ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் நடைபெற்றது. மொத்தமாக 237 கோடி ரூபாயை ஏலத்திற்காக அணிகள் வைத்திருந்த நிலையில், தென்னாப்பிரிக்க அணி வீரர் டேவிட் மில்லரை 2 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஏலம் எடுத்தது.
ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியதையடுத்து, 25 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. இதன்மூலம், வெளிநாட்டு வீரர்களிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றார் கேமரூன் கிரீன்.
அதைத்தொடர்ந்து, சி.எஸ்.கே அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரர் மதீஷா பதிரனா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 18 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
அதேபோல, தென் ஆப்பிரிக்க வீரர் குவிண்டன் டீகாக்-ஐ, மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்ப விலையான ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
இந்திய ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏழு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. ராஜஸ்தானை சேர்ந்த இளம் வீரர் கார்த்திக் சர்மாவை 14 கோடியே 2 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
அதேபோல, மற்றொரு இளம் வீரரான பிரசாந்த் வீரை. 14 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்திய வீரர் முகுல் சவுத்ரியை 2 கோடியே 6 லட்சம் ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
















