“திறமைக்கு வறுமை ஒரு தடையல்ல” என்ற வாசகத்தை நாம் பலமுறைக் கேட்டிருப்போம். அதனை மீண்டும் ஒருமுறை நிஜமாக்கிக் காட்டியிருக்கிறார் 20 வயதான கிரிக்கெட் வீரர் பிரசாந்த் வீர்.
உத்தரபிரதேச மாநிலம் அமேதி அருகே உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த் வீர். இவரது தந்தை ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியர். மாதம் 12 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறும் நிலையில், தனது மகனின் கிரிக்கெட் கனவை நனவாக்க உறுதுணையாக இருந்தார்.
15 வயதிலேயே தனது கனவுடன் வீட்டை விட்டு வெளியேறிய பிரசாந்த், சஹாரன்பூர் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கி, கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டார். தனது கனவுக்காக ஓய்வூதிய பணத்தை அனுப்பி உதவிய தாத்தா காலமான சூழலில் பிரசாந்த் கிரிக்கெட்டையே கைவிடத் துணிந்தார்.
இருப்பினும் அவரது தந்தை மற்றும் குடும்பத்தினரின் ஆதரவுடன் மீண்டும் தனது கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டார். அதன் பயனாக உத்தரப் பிரதேசம் டி20 கிரிக்கெட் லீக்கில் நொய்டா சூப்பர் கிங்ஸ் அணிக்காகத் தேர்வாகி விளையாடி வந்தார்.
அவரது சிறப்பான ஆட்டத்தால், தற்போது அபுதாபியில் நடைபெற்ற ஐ.பி.எல் மினி ஏலத்தில் பிரஷாந்த் வீரை சென்னை அணி 14.20 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
வறுமையின் கோரப் பிடியிலிருந்து வெளிச்சத்தின் உச்சத்திற்கு வந்திருக்கும் பிரசாந்தின் இந்தப் பயணம், அதிர்ஷ்டத்தால் கிடைத்ததல்ல. பல இரவுகள் தூக்கமில்லாமல், பசியோடு மைதானத்தில் சிந்திய வியர்வைக்குக் கிடைத்த பரிசு என்ற கூறினால் மிகையாகது.
















