உலகப் புகழ்பெற்ற நட்சத்திரக் கால்பந்தாட்டக்காரர் லயோனல் மெஸ்ஸி, அனந்த் அம்பானி அமைத்துள்ள “வன்தாரா” வன உயிரினப் பராமரிப்பு மையத்தைப் பார்வையிட்டார். அங்கு இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தையும், வன விலங்குகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் பராமரிப்பையும் அவர் நேரில் கண்டறிந்தார். இது குறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.
உலகப் புகழ்பெற்ற நட்சத்திரக் கால்பந்தாட்டக்காரர் லயோனல் மெஸ்ஸி, “GOAT TOUR OF INDIA” சுற்றுப்பயணத்தின் போது கொல்கத்தா, ஹைதராபாத் நகரங்களை முடித்த பின் மும்பைக்கு வந்தார். வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் மெஸ்ஸியைச் சச்சின் டெண்டுல்கர், ஷாரூக் கான் போன்ற நட்சத்திரங்கள் வரவேற்றுக் கவுரவித்தனர். தொடர்ந்து அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை நோக்கி கையசைத்து மெஸ்ஸி அவர்களை உற்சாகக் கடலில் ஆழ்த்தினார்.
இந்த நிலையில், அனந்த் அம்பானி நிறுவிய “வன்தாரா” வன உயிரினப் பராமரிப்பு மையத்தை லயோனல் மெஸ்ஸி நேரில் பார்வையிட்டார். இன்டர் மயாமி அணியின் வீரர்களான லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரொட்ரிகோ டி பாலுடன் வந்த மெஸ்ஸிக்கு, பாரம்பரிய இசை, மலர் மழை மற்றும் ஆரத்தி மூலம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து சனாதனத் தர்மத்தின் அடிப்படையில் இயற்கையையும், அனைத்து உயிர்களையும் மதிக்கும் மரபின்படி, வன்தாராவில் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய வழிபாடுகளில் மெஸ்ஸி உள்ளிட்டோர்ப் பங்கேற்றனர். பின்னர் புலிகள், யானைகள், கால்நடைகள், ஊர்வனங்கள் உள்ளிட்ட பல்வேறு மீட்கப்பட்ட விலங்குகள் பராமரிக்கப்படும், “வன்தாரா” வளாகத்தை மெஸ்ஸி சுற்றிப் பார்த்தார். அங்கு வன விலங்குகளுக்கான இயற்கைச் சூழல் ஏற்பாடுகளைக் கண்டு வியந்த அவர், காண்டாமிருகம், ஜிராஃப் மற்றும் யானைகளுக்கும் உணவு வழங்கி மகிழ்ந்தார்.
முன்னதாக அனாதை மற்றும் பாதுகாப்பற்ற குட்டி விலங்குகளைப் பராமரிக்கும் மையத்தைப் பார்வையிட்ட மெஸ்ஸி, அவை மீட்கப்பட்ட கதைகள் குறித்து குழுவினரிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக அனந்த் அம்பானி மற்றும் ராதிகா அம்பானி இணைந்து ஒரு சிங்கக்குட்டிக்கு “லயோனல்” எனப் பெயரிட்டனர். அதேபோல, யானைப் பராமரிப்பு மையத்தைப் பார்வையிட்டபோது, அங்கிருந்த யானைக் குட்டியான மணிக்லாலை மெஸ்ஸி சந்தித்தார். அப்போது அங்கு தன்னிச்சையாக நடந்த கால்பந்து விளையாட்டு அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அப்போது வன்தாராவில் வன விலங்குகள் பராமரிக்கப்படும் முறையை வெகுவாகப் பாராட்டிய மெஸ்ஸி, மும்பைப் பயணத்தின்போது இந்திய கலாச்சாரம், மனிதநேயப் பணிகள் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு குறித்த அனுபவங்கள் தன்னைப் பெரிதும் கவர்ந்ததாகத் தெரிவித்தார். முடிவில் நாரியல் உற்சவம் மற்றும் மட்கா போட் உள்ளிட்ட பாரம்பரிய சடங்குகளிலும் மெஸ்ஸி பங்கேற்று உலக அமைதிக்காகப் பிரார்த்தனை செய்தார். இந்நிலையில், இந்த நிகழ்வின்போது மெஸ்ஸி இந்து சடங்குகளில் பங்கேற்றதுடன், வன விலங்குகளுடன் நேரடி தொடர்பில் ஈடுபட்டுப் பராமரிப்பு குழுவினருடன் கலந்துரையாடியது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
















