அமெரிக்காவில் சமீபத்தில் வெளியான அரசு தரவுகளின்படி வேலை இல்லாதோர் விகிதம், கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது டிரம்ப் அரசாங்கத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
உலக வல்லரசு நாடுகளுள் முன்னிலை வகிக்கும் அமெரிக்காவில் வேலைவாய்ப்புச் சூழ்நிலை குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. அந்நாட்டின் தொழிலாளர் புள்ளிவிவர பணியகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ள நிலையில், நவம்பரில் 64 ஆயிரம் வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் செப்டம்பரில் 4.4 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பற்றோர் விகிதம், தற்போது 4.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 4 ஆண்டுகளில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகப் பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தின் நீண்டகால முடக்கம் காரணமாகத் தகவல் சேகரிப்பில் ஏற்பட்ட தாமதம், இந்த அறிக்கையை முன்கூட்டியே வெளியிடுவதில் சிக்கலை ஏற்படுத்தியது.
இதனால் கிட்டத்தட்ட 8 தசாப்தங்களில் முதல்முறையாக அக்டோபர் மாத வேலைவாய்ப்பு அறிக்கையில் வேலைவாய்ப்பற்றோர் விகிதம் இடம்பெறாமல் போனது. இந்த நிலை அமெரிக்காவின் தொழிலாளர் சந்தையில், புதிய அழுத்தங்கள் உருவாவதை சுட்டிக்காட்டுவதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அந்நாட்டின் மக்கள் கணக்கெடுப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் மாத சில்லறை விற்பனை மாற்றமின்றி நிலையாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 5 மாதங்களில் காணப்பட்ட மிக மோசமான நிலை எனவும் துறை சார்ந்த நிபுணர்கள் விவரித்துள்ளனர். அக்டோபர் மாதம் அமெரிக்க அரசு துறைகளில் ஒரு லட்சத்து 62 ஆயிரம் வேலைகள் குறைக்கப்பட்டதன் விளைவாகவே இந்த அதீத வேலை இழப்பு ஏற்பட்டது. இது அரசு வேலைகளை குறைக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளின் தொடர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது.
அதே வேளையில் என்னதான் இந்தத் தரவுகள் தொழிலாளர் சந்தையின் பலவீனத்தை வெளிப்படுத்தினாலும், வட்டி விகிதங்கள் குறித்த மத்திய வங்கி முடிவுகளில் இது உடனடி மாற்றத்தை ஏற்படுத்தாது எனப் பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் தனியார் துறைகளில் வளர்ச்சி நிலைத்துள்ளதாக வெள்ளை மாளிகை பொருளாதார ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் பண வீக்கம் 2 சதவீத இலக்கைவிட அதிகமாக உள்ளதால், குறைக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் மத்திய வங்கிக்குப் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், இந்த வேலைவாய்ப்புத் தரவுகள் விளக்குவதற்கு கடினமானவை என கூறும் ஆய்வாளர்கள், பணவீக்கத்தை கட்டுப்படுத்தப்பட வேண்டுமா அல்லது வேலைவாய்ப்பை அதிகரிக்க வட்டி விகிதங்களை குறைக்க வேண்டுமா என்ற குழப்பம் மத்திய வங்கிக்குள் அதிகரிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
மொத்தத்தில் அமெரிக்காவில் சமீபத்திய வேலைவாய்ப்புத் தரவுகள், தொழிலாளர் சந்தை மெதுவாகப் பலவீனமடைவதை வெளிப்படுத்தினாலும், பணவீக்கம் இன்னும் கட்டுக்குள் வராத நிலை மத்திய வங்கியைக் கடினமான முடிவுகளுக்குத் தள்ளியுள்ளது. வேலைவாய்ப்பை ஊக்குவிக்க வட்டி விகிதங்களை குறைக்க வேண்டிய கட்டாயமும், பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான கொள்கைகளைத் தொடர வேண்டிய அவசியமும் ஒரே நேரத்தில் எழுந்துள்ளதால், அமெரிக்க பொருளாதாரம் புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு வந்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
















