திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத திமுக அரசை கண்டித்து, உயிரை மாய்த்துக் கொண்ட பக்தரின் மறைவுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருப்பரங்குன்ற தீபத்தூணில் விவகாரத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகத் திமுக அரசு நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த மறுத்ததைக் கண்டித்து, பூர்ணசந்திரன் உயிரை மாய்த்துக் கொண்ட தகவலறிந்து சொல்லொண்ணா துயரத்தில் தவிப்பதாக கூறியுள்ளார். திமுக அரசின் வீண் பிடிவாதத்திற்கு பலியானவரின் குடும்பத்தாருக்கு என்ன ஆறுதல் சொல்லித் தேற்றுவதென்றே தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழர் வழிபாட்டு உரிமைகளை மீட்டெடுக்க காலங்காலமாக நாம் போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஆயிரம் தடைகள் வந்தாலும் அத்தனையும் தகர்த்தெறிந்து இனியும் நாம் தொடர்ந்து போராடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வையுடன்,அறத்தின் துணை கொண்டு போராட்டக்களத்தில் நாம் கைகோர்த்து நிற்போம் என்று கூறிய அவர், எந்தவொரு கஷ்டத்திற்கும் தற்கொலை என்பது என்றைக்குமே தீர்வாகாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இனியும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில், தீபமேற்ற வேண்டுமென்பதை வலியுறுத்தி, முருக பக்தர் பூர்ண சந்திரன் என்பவர், தீக்குளித்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு சூழலிலும், எந்தவொரு செயலுக்காகவும் தற்கொலை செய்து கொள்வது என்பது தீர்வாகாது என்றும், நீதிமன்றத்தின் பார்வைக்கு உட்பட்ட பொது விவகாரத்திற்காக, இன்னுயிரை மாய்த்துக் கொள்வது, நாம் கொண்டிருக்கும் கொள்கைக்கு முரண் என்றும் தெரிவித்துள்ளார். இப்படியான வருந்தத்தக்க முடிவுகளை ஒருபோதும் எவரும் மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.
ஓட்டுக்காக, பதவிக்காக, பணத்திற்காக பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளை சிதைத்து, சிறுபான்மை சமுதாயத்தினரின் ஓட்டுக்காக ஒரு உயிரை பலி வாங்கியிருக்கிறது திராவிட மாடல் திமுக அரசு பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கண்டித்துள்ளார்.
இதை ஒரு உணர்ச்சி வசப்பட்ட சம்பவமாகவோ, மத உணர்வாகவோ சித்தரிப்பவர்கள், நீட் தேர்வு விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்ட அனிதா மரணத்தில் திமுக மலிவு அரசியல் செய்ததை மறந்து விடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்று பொய்யை சொல்லி தரம் தாழ்ந்த அரசியலை செய்த திமுக அரசுதான், பூரண சந்திரனின் உயிரை பறித்ததற்கும் காரணம் என்பதை உணர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
















