திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை நிறைவு பெற்ற நிலையில், தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் வழக்கை
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் முன்பு நடைபெற்றது.
அப்போது, தூண் எத்தனை ஆண்டுகள் பழமையானது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தூண் எத்தனை ஆண்டுகள் பழமையானது என தெரியவில்லை என பதிலளித்தார்.
மேலும், மனுதாரர் பக்தராக வரவில்லை, சொத்தில் உரிமை உள்ளது என்ற நோக்கத்தில் மனு செய்துள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து, அடுத்தாண்டு கார்த்திகை தீபத்திற்கு மனுதாரர் குறிப்பிட்ட தூணை பரிசீலிக்க வாய்ப்பு உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை தீர்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
மேலும், தனி நீதிபதி விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் வரும் ஜனவரி 7ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், மனுதாரர் தரப்பு வெள்ளிக்கிழமை காலை பதில் மனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும் உத்தரவிட்டனர்.
















