அணுசக்தித் துறையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட சாந்தி மசோதா, மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்தார்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் புதன் கிழமை இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், வியாழக் கிழமை மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம், 2047ம் ஆண்டிற்குள் இந்தியாவின் அணுசக்தி உற்பத்தித் திறனை 100 ஜிகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது இந்தியாவின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதோடு, 2070-க்குள் கார்பன் வெளியேற்றம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
















