திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாததால் தீக்குளித்து உயிரிழந்த பூர்ண சந்திரன் உயிரிழப்புக்குத் தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாததால் மனம் உடைந்த மதுரையை சேர்ந்த பூரணச்சந்திரன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்ததை சுட்டிக்காட்டி, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அனைத்து மதத்தினரின் உரிமையை பெற்று தர வேண்டிய அரசே, இந்துக்களின் உரிமைக்கு எதிராகவும், இழிவுபடுத்தும் வகையிலும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் செயலால் தீக்குளித்து இறந்த பூர்ண சந்திரனினின் இறப்பிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் உரிமையை நிலைநாட்ட முடியவில்லை என்ற விரக்தியில், தன்னைத் தானே தீ வைத்து அழித்துக் கொள்ளும் நிலை தமிழகத்தில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பூர்ண சந்திரனின் உயிரிழப்புக்கு தார்மீக பொறுப்பேற்று, முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
















