இந்தியக் கடற்படையின் அணுசக்தி திறனை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், INS அரிகாத் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து K-4 பாலிஸ்டிக் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது. இதுகுறித்த செய்தி தொகுப்பு ஒன்றை தற்போது காணலாம்.
இந்தியா அண்மை காலமாகத் தனது மூலோபாய முன்னேற்றங்களை பல தளங்களில் வலுப்படுத்தி வருகிறது. குறிப்பாகப் பாதுகாப்புத் துறையில் ‘ஆத்மநிர்பர் பாரத்’ திட்டத்தின் கீழ் உள்நாட்டு ஆயுத உற்பத்தி, பாதுகாப்பு ஏற்றுமதி மற்றும் கூட்டு ராணுவப் பயிற்சிகள் மூலம் தன்னிறைவு மற்றும் தடுப்பு திறனை இந்தியா மேம்படுத்தியுள்ளது.
அத்துடன் வெளிநாட்டு கொள்கையில் குவாட் (Quad), பிரிக்ஸ், ஜி-20 போன்ற பன்முக அமைப்புகளில் வீரியமான பங்கு வகித்து, இந்தோ-பசிபிக் பகுதியில் நிலைத்தன்மை மற்றும் சக்தி சமநிலையை இந்தியா வலியுறுத்துகிறது. அதேபோல, பொருளாதார ரீதியிலும் உற்பத்தி ஊக்கத் திட்டங்கள், டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலி பன்முகப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம், உலக பொருளாதாரத்தில் தனது பங்கை இந்தியா வலுப்படுத்தியுள்ளது.
அத்துடன் விண்வெளி, சைபர் பாதுகாப்பு, ஆற்றல் பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத் தக்க ஆற்றல் துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மூலமும், இந்தியா தனது நீண்டகால மூலோபாய இலக்குகளை உறுதிப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்தியா தனது கடற்படை மூலமாக ஒரு முக்கிய மூலோபாய முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
இந்திய கடற்படையின் அரிஹந்த் வகை அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களில் 2-வது கப்பலான INS அரிகாத் மூலம், K-4 என்ற பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை சுமார் 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது MAC-5-ஐ விட அதிக வேகத்தில் அதாவது ஒருமணி நேரத்திற்கு 6 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஹைபர்சோனிக் ஏவுகணையாகவும் கருதப்படுகிறது. இந்தச் சோதனை, சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணுசக்தி அண்டை நாடுகளை எதிர்கொள்ளும், இந்தியாவின் பாதுகாப்பு கணக்கீட்டில் மிக முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பயங்கரவாத தாக்குதல்களுக்குக் கடும் பதிலடி கொடுக்கப்படும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு, பஹல்காம் தாக்குதலுக்குப் பின் நடத்தப்பட்ட ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தெளிவாக வெளிப்பட்டது. அதன் பிறகு இந்தியா தனது பாதுகாப்பு படைகளை முழுமையாக நவீனப்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாகவே இந்த K-4 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளதாகத் துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆழ்கடலில் இருந்து ஏவப்படுவதாலும், எதிரிகளின் கண்காணிப்புக்கு எளிதில் சிக்காத தன்மையாலும், இந்த ஹைபர்சோனிக் ஏவுகணை இந்தியாவுக்கு நம்பகமான 2-வது தாக்குதல் திறனை (Second Strike) வழங்குகிறது.
அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, நாட்டின் அணு தடுப்பு கொள்கையின் அடிப்படை தூணாக நம்பப்படுகிறது. இதற்கிடையே பலரும் K-4 ஏவுகணையை பிரம்மோஸ் ஏவுகணையுடன் ஒப்பிட்டாலும், இவை இரண்டின் பங்களிப்பும் முற்றிலும் வேறுபட்டது எனத் துறை சார்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூப்பர் சோனிக் க்ரூஸ் ஏவுகணையான பிரம்மோஸ், போர்க்கள தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் நிலையில், K-4 ஏவுகணை முழுக்க முழுக்க மூலோபாய தடுப்பு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாகவே இந்த K-4 ஏவுகணையை இந்திய கடற்படையின் போர்திறன் பெருக்கி எனப் பாதுகாப்பு நிபுணர்கள் வர்ணித்துள்ளனர். K-4 ஏவுகணை, நிலம், வான் மற்றும் கடல் என்ற இந்தியாவின் மூன்றுமுக திறனை முழுமையாக்கியுள்ள நிலையில், இது இந்தியாவின் மூலோபாய தடுப்பு சக்தியையும் புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக கருதப்படுகிறது.
















