சிவகங்கை காமராஜர் காலனியில் நோட்டீஸ் ஒட்டச் சென்ற அறநிலையத்துறை அதிகாரியை குடியிருப்புவாசிகள் தாக்க முயன்ற நிலையில், போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சிவகங்கையை அடுத்துள்ள காமராஜர் காலனியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அறிநிலையத்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட இடம் கௌரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமானது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கடந்த 10ஆம் தேதி காமராஜர் காலனியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து அகற்ற அறநிலையத்துறை அதிகாரிகள் வந்தபோது குடியிருப்புவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், குடியிருப்புகளில் உள்ள 52 வீடுகளில் மின் இணைப்பை துண்டிப்பது குறித்து நோட்டீசை ஓட்ட அறநிலையத்துறை அலுவலர்கள் வந்துள்ளனர்.
அப்போது, அவரை சூழ்ந்து கொண்டு குடியிருப்புவாசிகள் தாக்க முயன்றனர். இதனைக் கண்ட போலீசார், குடியிருப்புவாசிகளை தடுக்க முற்பட்டபோது இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
















