திருச்சி, ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் விடுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமான பஞ்சகரை பகுதியில், யாத்ரி நிவாஸ் என்ற பெயரில் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது.
பக்தர்களின் வசதிக்காகக் கட்டப்பட்ட விடுதியில், திருவையாறை சேர்ந்த சாமிநாதன், தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் கடந்த 10-ம் தேதி முதல் தங்கி வந்துள்ளார். குறிப்பிட்ட தேதியில் சாமிநாதன் அறையை காலி செய்யாததால், இதுபற்றிக் கேட்பதற்காக விடுதி பராமரிப்பாளர்கள் அவரது அறைக்குச் சென்றனர்.
அப்போது, குடும்பத்தினர் 4 பேரும் அறையில் பிணமாகக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், காவல்நிலையத்திற்கு தகவலளித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது, சாமிநாதனின் இரு மகள்களும் மன வளர்ச்சி குன்றியவர்கள் என்பதும், தனக்கு பிறகு மகள்களை யார் பார்த்துக் கொள்வது என்ற மன உளைச்சலில் இருந்த சாமிநாதன், குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.
















