அமெரிக்காவின் அதீத வரிகளால் இந்திய ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஓமனுடன் இந்தியா மேற்கொண்டுள்ள CEPA வர்த்தக ஒப்பந்தம், இந்தியப் பொருட்களுக்குப் புதிய சந்தையைத் திறந்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் இந்தியாவின் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் முக்கிய முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள கடுமையான இறக்குமதி வரிகளால், இந்தியாவின் ஏற்றுமதி துறைகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. தற்போது இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதால், அமெரிக்க சந்தையில் இந்தியப் பொருட்களின் விலை உயர்ந்து போட்டித்திறன் குறைந்துள்ளது. குறிப்பாகத் துணி, வாகன உதிரிபாகங்கள், உலோகங்கள் போன்ற தொழிலாளர் சார்ந்த துறைகள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக ஆதரவு அளிப்பதாகக் குற்றம்சாட்டி, அமெரிக்கா இந்தக் கூடுதல் வரிகளை விதித்துள்ளது. இதன் விளைவாகவே இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரும் இழப்புகளை எதிர்கொண்டு, அமெரிக்காவுக்கு மாற்றாகப் புதிய சந்தைகளைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், ஓமனுடன் கையெழுத்திட்டுள்ள முழுமையான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) இந்தியாவிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய ஓமன் பயணத்தின்போது, தலைநகர் மஸ்கட்டில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இந்தியா தனது வெளிநாட்டு வர்த்தகத் தந்திரத்தில் ஏற்படுத்திய மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. CEPA ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியில் 98 சதவீதத்துக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஓமன் சந்தையில் வரிவிலக்கு அளிக்கிறது.
இந்தியாவின் முத்துக்கள், நகைகள், துணிகள், தோல் பொருட்கள், காலணி, மருந்துகள், மருத்துவ சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல துறைகள் இதனால் பயன் பெறவுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இதுவரை 5 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்ட பொருட்களெல்லாம் தற்போது முழு வரிவிலக்கு பெறுகின்றன. இதற்கு மாற்றாக, இந்தியாவும் ஓமனிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்குச் சுமார் 78 சதவீதம் வரை வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது.
அதே நேரத்தில் பேரீச்சம்பழம், மார்பிள் கல், பெட்ரோ ரசாயனங்கள் போன்ற சில முக்கிய பொருட்களை, ஓமனிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு வரை மட்டுமே குறைந்த வரியுடன் இறக்குமதி செய்ய இந்தியா அனுமதித்துள்ளது. அந்த அளவை கடக்கும் பட்சத்தில் வழக்கமான வரிகளே விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள இந்தியா, இதன் மூலம் உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்துள்ளது. அதேபோல, பால் பொருட்கள், தேயிலை, காப்பி, தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்பதால், இவற்றுக்கு எந்த வரிவிலக்கும் வழங்கப்படாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் இந்த CEPA ஒப்பந்தம் பொருட்கள் மட்டுமின்றி சேவை துறையிலும் முக்கிய மாற்றங்களை கொண்டுவரவுள்ளது. குறிப்பாகத் தகவல் தொழில்நுட்பம், தொழில்முறை சேவைகள், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில், இந்திய நிறுவனங்களுக்கு 100 சதவீத முதலீட்டு அனுமதியை இந்த ஒப்பந்தம் பெற்றுத் தந்துள்ளது. அதேபோல, திறமையான பணியாளர்களின் தற்காலிக பணி நியமனங்களுக்கான விதிகளும் இந்த ஒப்பந்தத்தால் தளர்த்தப்பட்டுள்ளன.
இந்தியா – ஓமன் இடையிலான வர்த்தகம் தற்போது ஆண்டுக்கு சுமார் 10.5 பில்லியன் டாலராக உள்ளது. ஓமனில் சுமார் 7 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்கள் மூலம் ஆண்டுக்கு 2 பில்லியன் டாலர் அளவிற்கு பணப்பரிவர்த்தனையும் நடைபெறுகின்றன. இந்த சூழ்நிலையில், வரும் 2026-ன் முதல் காலாண்டில் அமலுக்கு வரும் இந்த புதிய ஒப்பந்தம் மூலம், இந்தியாவுடைய மேற்காசிய பொருளாதாரம் மற்றும் மூலோபாய நிலைபாடு மேலும் வலுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















