மெரினாவில் கடைகள் ஒதுக்குவது தொடர்பான வழக்கில் வரும் 22ஆம் தேதி கடற்கரை பகுதியில் நீதிபதிகள் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்தனர். அறிக்கையுடன் கடைகள் அமைப்பது தொடர்பான வரைவு வரைபடங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வரைபடத்தில் கடைகளுக்கான சரியான இடங்கள் குறித்து தகவல் தெளிவாக இல்லை என குறிப்பிட்டனர். எனவே, மெரினா கடற்கரை பகுதியில் கடைகள் அமைப்பது தொடர்பாக வரும் 22ம் தேதி நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
நேரடி ஆய்வில் சென்னை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் ஆணையிட்டனர்.
















