.கொடைக்கானலில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக, பச்சை புல்வெளிகள் மீது வெண்ணிறப் போர்வை போத்தியதுபோல காட்சியளிக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், 3 நாட்களாக ஒரு சில இடங்களில் உறைபனி தென்பட்டது. இந்நிலையில், கொடைக்கானலில் ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதால் ஜிம் கானா, கீழ் பூமி, பாம்பார்புரம், மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் ஐஸ் கட்டிகளாக உறைந்துள்ள நிலையில், பச்சை புல்வெளிகள் மீது வெண்ணிறப் போர்வை போத்தியதுபோல காட்சியளிக்கிறது. கொடைக்கானலில் நிலவும் குளிர்ச்சியான சூழலை கண்டுகளிக்கும் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும், பனிப்பொழிவை காண்பதற்கு வடஇந்தியாவிற்கு செல்ல வேண்டாம், கொடைக்கானலுக்கு வந்தாலே போதும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
உதகையில் உள்ள காந்தல் முக்கோணம், குதிரை பந்தைய மைதானம், தலைக்குந்தா உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உறைப்பனி பொழிவு அதிகரித்து காணப்பட்டது. கடும் குளிர் காரணமாக தோட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் நெருப்பை மூட்டி குளிர்காய்ந்தனர்.
அப்பர்பவானி, கோரகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட இடங்களில் உறைபனி நிலவுவதுடன் மைனஸ் அளவில் வெப்பநிலை நிலவுவதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
















