பீகாரை தொடர்ந்து மேற்கு வங்கமும் காட்டாட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என மம்தாவின் திரிணாமுல் காங்கிரசை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுவதாக இருந்தது. இதற்காகக் கொல்கத்தா வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர்மூலம் ராணாகாட்டில் உள்ள தாஹேர்பூர் ஹெலிபேட் தளத்துக்குப் புறப்பட்டார்.
ஆனால் அங்கு நிலவிய அடர்ந்த மூடுபனியால் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாமல் கொல்கத்தாவுக்கே மீண்டும் திரும்பியது. இதனால் பிரதமரை நேரில் காண திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், வந்தே மாதரம் பாடலை இயற்றிய பக்கிம் சந்திர சாட்டர்ஜி போன்ற ஞானியை நாட்டுக்கு வழங்கிய மேற்கு வங்கம், தற்போது மெகா காட்டாட்சியின் பிடியில் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்ற மெகா வெற்றியை உதாரணமாகக் கூறிய அவர், அதேபோல் மேற்கு வங்கமும் மெகா காட்டாட்சியில் இருந்து விடுதலை பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரசை அராஜகம் மற்றும் ஊழல் நிறைந்த அரசு என விமர்சித்த பிரதமர் மோடி, ஊடுருவல்காரர்களை பாதுகாக்க திரிணாமுல் காங்கிரஸ் கடும் முயற்சிகளை மேற்கொள்வதாகவும் குற்றம்சாட்டினார்.
















