நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டைன் தொடர்புடைய 68 புகைப்படங்கள் அடங்கிய எப்ஸ்டைன் Files ஆவணங்களை அமெரிக்காவின் நீதிதுறை பகிரங்கப்படுத்தி உள்ளது. எப்ஸ்டைன் files என்றால் என்ன? அதில் எந்தெந்த பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகம் முழுவதும் இருக்கும் பெரும் பணக்காரர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த முன்னணி பைனாஸ்சியரான ஜெஃப்ரி எப்ஸ்டைன், மீது சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் தள்ளியதாகவும், பிரபலங்களுக்குச் சிறுமிகளைப் பாலியல் அடிமைகளாக விற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. முதன் முதலில்,2008-ஆம் ஆண்டில், 14 வயது சிறுமி ஒருவரின் பெற்றோர் புளோரிடா காவல்துறையிடம், எப்ஸ்டைன் தனது Palm Beach இல்லத்தில் தங்கள் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் புகார் அளித்தனர். உடனே, அரசு வழக்கறிஞர்களுடன் plea deal எனப்படும் ஒரு குற்ற ஒப்புதல் ஒப்பந்தத்தை எப்ஸ்டைன் ஏற்படுத்திக் கொண்டார்.
இதன்மூலம் கடுமையான தண்டனையிலிருந்து தப்பித்தாலும் 13 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, பாலியல் தொழிலுக்காகக் மைனர் சிறுமிகளைக் கொண்ட ஒரு தனி நெட்வொர்க்கை எப்ஸ்டைன் நடத்தியதாகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிறையில் இருந்த போது எப்ஸ்டைன் உயிரிழந்தார். அவரது மரணம் தற்கொலை என்று அறிவிக்கப்பட்டது.
இந்த இரண்டு குற்றவியல் விசாரணைகளில் எப்ஸ்டைன் சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்திய சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உட்பட ஒரு பெரிய ஆவணக் குவியலையே FBI திரட்டியுள்ளது. இந்த ஆண்டு அமெரிக்க நீதித்துறையின் குறிப்பாணையில் எப்ஸ்டைன் வழக்கில் FBI யிடம் அதன் பல hard drives மற்றும் 300 GIGA BYTES க்கும் அதிகமான தரவுகள் மற்றும் ஆதாரங்கள் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
குறிப்பிட்டுள்ளது. எப்ஸ்டைனால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப் படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் பயன்படுத்தப்பட்ட சட்டவிரோத பொருட்கள் ‘பெருமளவில்’ இருப்பதாகவும் நீதித்துறை கூறியுள்ளது. ஒரு காலத்தில் எப்ஸ்டைனின் நெருங்கிய நண்பராக இருந்த அதிபர் ட்ரம்ப், எப்ஸ்டைன் தொடர்பான விசாரணை ஆவணங்களை வெளியிடுவதைத் தடுக்க தீவிர முயற்சி எடுத்து வந்தார். ஆனால் கடந்த நவம்பரில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் Epstein files ஆவணங்களை வெளியிடுவதைக் கட்டாயப்படுத்தும் சட்டம் கொண்டுவரப்பட்டது.
வேறு வழியில்லாமல் அந்தச் சட்டத்தில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டார். தொடர்ந்து, அமெரிக்க நீதித்துறை Epstein files ஆவணங்களை வெளியிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான பல லட்சம் ஆவணங்கள் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்று துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் கூறியுள்ளார். ட்ரம்பின் புகைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், எப்ஸ்டீனின் கூட்டாளி கிஸ்லேன் மேக்ஸ்வெல் மற்றும் அரைகுறை ஆடையுடன் இருக்கும் அடையாளம் தெரியாத பெண்களுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஜனநாயகக் கட்சியின் செனட் சிறுபான்மைக் கட்சித் தலைவர் சக் ஷுமர், இது ட்ரம்பின் அசிங்கமான கதையைப் பாதுகாக்க செய்யப்படும் வேலை என்று தெரிவித்துள்ளார். இதேபோல், பாப் இசை ஜாம்பவான் மைக்கேல் ஜாக்சன், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் திரைப்பட இயக்குநர் வுடி ஆலன் போன்ற உலகப் புகழ்பெற்ற மனிதர்கள் எப்ஸ்டீனுடன் இருக்கும் காட்சிகளும் இதில் அடங்கும். எப்ஸ்டீன் எந்த அளவிற்கு செல்வாக்கு மிக்க மனிதர்களுடன் நெருக்கமாக இருந்தார் என்பதை இந்த ஆவணங்கள் காட்டுகின்றன.
அமெரிக்க உயர்மட்ட பிரபலங்களின் வட்டத்தில் சிறுமிகளைப் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தும் நெட்வொர்க்கை அரசு பாதுகாக்கிறது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே இருந்துவருகிறது. மேலும், Epstein குறித்துப் பல கேள்விகள், வெறும் கேள்விகளாக மட்டுமே உள்ளன.
















