வெனிசுலாவுடனான போர் ஏற்படுவதற்கான வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், அமெரிக்கப் பயன்படுத்தும் முதல்ஆயுதம் கிராஃபைட் குண்டாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை போதை பொருள் பயங்கரவாதியாக அறிவித்துள்ள அமெரிக்கா அவரைக் கைது செய்யப் உதவுபவர்களுக்கு சுமார் 488 கோடி ரூபாய் சன்மானமும் அறிவித்துள்ளது. கரீபியன் கடலில் வெனிசுலாவுக்கு அருகே தனது கடற்படையைக் குவித்துள்ள அமெரிக்கா கடந்த செப்டம்பர் முதல் அப்பகுதியில் அமெரிக்கா நடத்திய 28 தாக்குதல்களில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப் பட்டுள்ளனர்.
சமீபத்தில் வெனிசுலாவில் இருந்து எண்ணெயை ஏற்றிவந்த ஸ்கிப்பர் என்ற பெரிய எண்ணெய் கப்பலை அமெரிக்ககடற்படை உதவியுடன் அந்நாட்டு கடலோர காவல்படை கைப்பற்றியது. இது அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்கொள்ளை என்று வெனிசுலா குற்றம்சாட்டியுள்ளது. இதற்கிடையே பொருளாதார தடை விதிக்கப்பட்ட எண்ணெய் கப்பல்களை வெனிசுலாவுக்கு செல்லவிடாமல் முற்றுகை யிட அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவிடம் இருந்து திருடிய எண்ணெய், நிலம், மற்றும் பிற சொத்துக்களை வெனிசுலா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனால் கரீபியன் கடற்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அப்படி வெனிசுலா மீது போர் தொடுக்கும் அமெரிக்கா முதல் ஆயுதமாக கிராஃபைட் குண்டுகளைப் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
கிராஃபைட் குண்டு ஒரு சாதாரண குண்டு போல வெடிக்காத ஒரு சிறப்பு ஆயுதமாகும். இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளின் மின்சார உள்கட்டமைப்பை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் குண்டு கார்பனின் மிகச் சிறிய இழைகளை காற்றில் பரப்புகிறது. இந்தச் சிறிய இழைகள் மின் கம்பிகள், மின்மாற்றிகள் அல்லது மின் நிலையங்கள் போன்றவற்றின் மீது விழுகின்றன.
கிராஃபைட் மின்சாரத்தைக் கடத்தும் என்பதால், இந்த இழைகள் மின் சாதனங்களைத் தொடும்போது மின்கசிவை ஏற்படுத்துகின்றன. இது மின் அமைப்பைச் செயலிழக்கச் செய்து, மின்சாரத்தை முழுமையாகத் துண்டித்து விடுகிறது. ஒரு துறைமுகத்தின் மீது வீசப்படும் கிராஃபைட் குண்டு பல்லாயிரக்கணக்கான கொள்கலன்களை ஒரே இடத்தில் முடக்கி, முக்கியமான வர்த்தகப் பாதைகளை ஒரே நொடியில் செயலிழக்க வைக்கும். நவீன நகர்ப்புற வாழ்க்கைக்கு அவசியமான ஏடிஎம்கள் வங்கிகள் மருத்துவமனைகள், குடிநீர் அமைப்புகள் மற்றும் அதிவேக ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து அமைப்புகளுக்கு மின் தடைகளை ஏற்படுத்தி அன்றாட வாழ்க்கையை முடக்கும். 1991 வளைகுடாப் போரின் போது, அமெரிக்கா கிராஃபைட் குண்டுகளைப் பயன்படுத்தி, குறைந்தபட்ச மக்கள் பலியுடன் ஈராக்கின் மின் கட்டமைப்பில் சுமார் 70 சதவீதத்தை செயலிழக்கச் செய்தது.
1999 கொசோவோ போரின் போது வான்வழித் தாக்குதல்களை எதிர்க்கும் செர்பியாவின் திறனைக் குறைப்பதற்காகஅதன் மின் உள்கட்டமைப்பின் மீது கிராஃபைட் குண்டுகளை நேட்டோ படைகள் பயன்படுத்தியது. வெனிசுலாவின் மின்சார உள்கட்டமைப்பு “Achilles heel” என்ற தனித்துவமான கட்டமைப்பாகும். நாட்டின் மொத்த மின்சாரத்தில் கிட்டத்தட்ட 80 சதவீதம் கூரி அணையில் உள்ள Simón Bolívar Hydroelectric Plant சிமோன் பொலிவார் நீர்மின் நிலையத்தால் உற்பத்தி செய்யப் படுகிறது. அமெரிக்கா இந்த அணையைக் கூடத் தாக்க வேண்டியதில்லை.
San Geronimo B substation, சான் ஜெரோனிமோ பி துணை மின்நிலையதையை தாக்கினாலே போதுமானது. நாடு முழுவதும் ஒரே நொடியில் மின்சாரத்தைத் துண்டித்து விடமுடியும். நேரடி இராணுவத் தாக்குதல்களைத் தொடங்குவதற்கு முன்பு வெனிசுலாவின் வான் பாதுகாப்புகளை முதலில் செயலிழக்கச் செய்வதுடன் S-300VM ரேடார் வலைப்பின்னல்கள் மற்றும் இராணுவ கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள்,ஆகியவற்றை செயலிழக்க வைப்பதே கிராஃபைட் குண்டு வீசுவதன் நோக்கமாகும். 2,000 பவுண்டு எடையுள்ள வெடிகுண்டுகளையோ ஏவுகணைகளையோ வீசி மின் நிலையத்தைத் தாக்காமல், மின்சார உள் கட்டமைப்புகளை நிரந்தரமாக அழிக்கும் கிராஃபைட் குண்டு ஒரு மென்மையான ஆயுதமாகக் கருதப்படுகிறது.
















