வடகிழக்கின் மிகப்பெரிய விமான நிலையமான கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஆண்டுக்கு சுமார் 13.1 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், சுமார் நான்காயிரம் கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் முதல் முதலமைச்சரான கோபிநாத் பர்தோலோயின் பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்திற்கு வெளியே அவரது 80 அடி சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பின்னர், புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, இது அசாமின் உட்கட்டமைப்பிற்கு பெரிய ஊக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடியுடன், அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, அம்பானி குழுமத்தின் தலைவர் கெளதம் அம்பானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நவீன விமான நிலைய வசதிகள் மற்றும் மேம்பட்ட உள்கட்டமைப்புகள், ஒரு மாநிலத்தின் புதிய வாய்ப்புகளுக்கான நுழைவுவாயில்கள் என்று குறிப்பிட்டார். கடந்த கால காங்கிரஸ் ஆட்சியில் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெறவில்லை என்று குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, நாட்டை பிளவுபடுத்தும் வன்முறை கலாசாரம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செழித்தோங்கியதாக குற்றம்சாட்டினார்.
அதே வேளையில், கடந்த 11 ஆண்டுகளில், பல நூறு கோடி மதிப்பிலான திட்டங்கள் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் மாற்றமடைந்துள்ளதையும் பிரதமர் மோடி எடுத்துக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தனது வாக்கு வங்கிக்காக காங்கிரஸ் கட்சி தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாகவும், வங்காளம் மற்றும் அசாமில் ஊடுருவல்காரர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் கடுமையாக விமர்சித்தார்.
இறுதியாக, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறத் தயாராகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், 2047-க்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை அடைய நவீன உள்கட்டமைப்பு மிக முக்கியமானது எனக் கூறினார்.
















