மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் லட்சியத் திட்டமான ககன்யான் திட்டத்தில், விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமியில் தரையிறக்குவதற்கான ‘ட்ரோக் பாராசூட்’ சோதனையை ISRO வெற்றிகரமாக முடித்துள்ளது.
சண்டிகரில் உள்ள DRDO ரயில் டிராக் ராக்கெட் ஸ்லெட் வசதியில், டிசம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் crew module விண்வெளியில் இருந்து அதிவேகமாக வரும்போது, அதன் வேகத்தைக் குறைத்து விண்கலத்தைச் சீராக நிலைநிறுத்துவது இந்த ட்ரோக் பாராசூட்களின் முக்கியப் பணியாக உள்ளது. ககன்யான் விண்கலத்தில் மொத்தம் 10 பாராசூட்கள் நான்கு வெவ்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
முதலில் சிறிய பாராசூட்கள் மூலம் விண்கலத்தின் மூடி அகற்றப்படும், பின் ட்ரோக் பாராசூட்கள் வேகத்தைக் குறைக்கும்.
இறுதியாக மூன்று ‘மெயின்’ பாராசூட்கள் விரிந்து விண்கலத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கும். மிகவும் சவாலான மற்றும் தீவிரமான வேக நிலைகளில் இந்த பாராசூட்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை இஸ்ரோ சோதித்துப் பார்த்தது. இதில் அனைத்து இலக்குகளையும் எட்டி, பாராசூட் அமைப்பு உறுதியாக இருப்பதை இஸ்ரோ உறுதி செய்துள்ளது.
















