சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் அச்சுறுத்தும் முயற்சி என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உட்பட மேலும் 36 முன்னாள் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் அதை நிறைவேற்றாத தமிழக அரசு, மேல்முறையீடு செய்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்தனர்.
அதேநேரத்தில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகளும், இந்து அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவு தெரிவித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உட்பட, 56 நீதிபதிகள் கூட்டறிக்கை வெளியிட்டு இருந்தனர்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் நடவடிக்கைக்கு எதிராக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணா முராரி, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பார்த்திபன் உள்ளிட்ட 36 நீதிபதிகள் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், பதவி நீக்க தீர்மானம் என்பது அச்சுறுத்தும் முயற்சி என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.
















