RSS பற்றி உலகளவில் தெரிந்திருந்தாலும், அதன் உண்மையான பணி மற்றும் நோக்கம் குறித்து பலருக்குத் தெளிவான புரிதல் இல்லை என்று RSS தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார்.
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் 100-வது ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கொல்கத்தாவில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பங்கேற்றார். டெல்லி மற்றும் பெங்களூருவை தொடர்ந்து மூன்றாவதாக கொல்கத்தாவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மோகன் பகவத், RSS-ஐ பாஜகவின் கண்ணோட்டத்தில் பார்ப்பது தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரித்ததுடன், சங்கத்தை புரிந்துகொள்ள விரும்பினால், அதன் பணிகளை அனுபவித்து உணர வேண்டும் என வலியுறுத்தினார்.
பிறகு, சாதி பாகுபாடுகளை களைவது குறித்து பேசிய மோகன் பகவத், சுவாமி விவேகானந்தர் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதி ஆகியோரை குறிப்பிட்டார்.
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு அவர்கள் மேற்கொண்ட பணிகளின் பலன்கள், இன்று வரை நீடிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, RSS தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்துப் பேசிய மோகன் பகவத், அரசியல் அதிகாரத்திற்காகவோ, யாரையும் எதிர்ப்பதற்காகவோ RSS தொடங்கப்படவில்லை என்றும், ஹிந்து சமூகத்தை ஒருங்கிணைப்பதும், மேம்படுத்துவதுமே ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.
















