நெல்லை சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கருப்புக்கொடி காட்ட முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
2 நாட்கள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை மாவட்டத்திற்கு சனிக்கிழமை வருகை புரிந்தார். இதன் காரணமாக நெல்லை முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து, முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த இந்து முன்னணியினர் திட்டமிட்டிருந்தனர்.
நெல்லையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் செல்ல இருந்த வழியில், திடீரென திரண்ட இந்து முன்னணி நிர்வாகிகள், கருப்புக் கொடிகளை ஏந்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
















