நெல்லை சீமைக்கு வருகை தந்து பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைத்துள்ளதாக பெருமை பேசும் முதல்வர் ஸ்டாலினுக்கு பள்ளி தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் தென்காசி மாவட்டம் கூடலூர் அரசுப் பள்ளிக்குப் புதிய கட்டடங்களைத் துவக்கி வைத்தது ஞாபகம் இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தாங்கள் துவக்கி வைத்த அந்தக் கட்டடங்களில் தடுப்புச்சுவர் தொடங்கி கழிவறை வரை அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லாததாலும், வேறு வகுப்பறைகள் இல்லாததாலும் மரத்தடி நிழலில் மாணவர்கள் பயிலும் கொடூரம் நேர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் நேரம் கழுத்தை நெறிக்கும் வேளையில் கணக்கு காட்டவும், காணுமிடமெல்லாம் விளம்பரம் வைக்கவும், கடைசி நேரத்தில் கமிஷன் கல்லா கட்டவும், கஜானாவை வழித்தெடுக்க மட்டுமே திமுக ஆட்சியில் திட்டங்கள் தொடங்கி வைக்கப்படுகின்றன என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“பொருநையைப் போற்றுகிறேன்” என்னும் போர்வையில் ஃபோட்டோஷூட்டில் மட்டுமே ஆர்வம் காட்டி, அரைகுறையாக நான்கு திட்டங்களைத் துவக்கி வைத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டு வெற்றுத் தம்பட்டம் அடிக்கும் தங்கள் அறிவாலய அரசு அரசு தமது விளம்பர மோகத்தாலேயே வீழும் நாள் நெடுந்தூரமில்லை என்றும் நயினார் தெரிவித்துள்ளார்.
















