இரு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர், தனது தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் வாலிபால், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் அசத்தி வருகிறார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் உள்ள விவசாயக் குடும்பத்தில் பிறந்த பர்சா ராம், இவருக்கு வறுமை ஒரு தடையாக இருந்ததில்லை. ஆனால், 5 வயதில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட ஒரு மின்சார விபத்து, அவரது இரு கைகளையும் பறித்துக்கொண்டது.
அந்தச் சிறு வயதில் உலகமே இருண்டது போன்ற உணர்வு. ஆனால், அங்கிருந்துதான் அவரது புதிய பயணம் தொடங்கியது. கைகள் இல்லையே என்ற ஏக்கம் அவரை முடக்கவில்லை. வாலிபால், கிரிக்கெட் மற்றும் நீச்சல் என அனைத்து விளையாட்டுகளையும் தனது விடாமுயற்சியால் பயின்றார்.
விளையாட்டுதான் என்னை மீட்டெடுத்ததாக பெருமிதத்துடன் தெரிவித்தார். இவரது விடா முயற்சியின் பயனாக விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் 10-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
தற்போது இவரது ஒற்றை இலக்கு, பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காகத் தங்கப் பதக்கம் வெல்வது மட்டுமே. தன் நாட்டின் தேசியக் கொடி உலக அரங்கில் உயரே பறக்க வேண்டும் என்ற கனவோடு, தனது பயிற்சியைத் தொடர்ந்து வருகிறார்.
















