வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரக் கொள்கை மற்றும் புவிசார் அரசியல் வியூகம் எனப் பிரதமர் மோடியின் தலைமையிலான இந்தியா, ஒரு புதிய உலக ஒழுங்கை சத்தமே இல்லாமல் ஏற்படுத்தியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நீண்ட காலமாகவே, சர்வதேச தலைமை என்பது உலகளாவிய பொது உரிமைகளை ஏகபோகமாக அனுபவிப்பதற்கான முழு சுதந்திரமாகவே பார்க்கப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு வெற்றி பெற்றவர்களின் படிநிலையில் உலக ஒழுங்கு அமைந்தது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா போட்டியிடும் வல்லரசுகளாகவும், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனாவின் ஆதரவை நாடும் நாடுகள் வல்லரசுகளுக்கான துணை சக்திகளாகவும் இருந்தன.
ஆனால் இந்த விஷயத்தில் எப்போதும் ஒரு விதிவிலக்கான நாடாகவே இந்தியா இருந்து வருகிறது. கடந்த நூற்றாண்டு “அமெரிக்க நூற்றாண்டு” என்று அழைக்கப்பட்ட நிலையில், இந்த நூற்றாண்டு “ஆசிய நூற்றாண்டு” என்று அழைக்கப்படுகிறது. இதில் இந்தியாவே முக்கிய பங்கு வகிக்கிறது. கோவிட்- காலத்துக்குப் பிறகு, நிச்சயமற்ற பொருளாதார சூழலில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளும் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.
இது நம்பகமான உலகளாவிய தலைமையின் தேவையை சுட்டிக் காட்டியது. இத்தகைய சூழ்நிலையில், பிரதமர் மோடியின் தலைமையில் கடந்த 11 ஆண்டுகளில், உலக அரங்கில் தலைமைத்துவ வெற்றிடத்தை இந்தியாவால் தான் நிரப்ப முடியும் என்று உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது.
நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் தொற்றுநோயால் உலகம் பாதிக்கப்பட்டபோது, ’உலகின் மருந்தகம்’ என்ற பெருமையுடைய இந்தியா, மைத்ரி திட்டத்தின் கீழ் மாலி, நைஜர், ஈக்வடார், பொலிவியா, பெரு, செனகல் உள்ளிட்ட சுமார் 100 நாடுகளுக்கு 70 லட்சத்துக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. பாரிஸில் நடந்த COP21 மாநாட்டில் இந்தியாவும் பிரான்சும் இணைந்து தொடங்கிய பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான 92 உறுப்பு நாடுகள் உள்ளடங்கிய சர்வதேச சூரிய சக்தி கூட்டணியை அமைத்தது முக்கிய சான்றாகும்.
2023 ஆம் ஆண்டில் G20 கூட்டமைப்பைத் தலைமையேற்ற இந்தியா ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்’ என்ற கருப்பொருளின் கீழ் ஜி 20 உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியது. முன்னதாக அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ் அண்டை நாடுகளின் உள்கட்டமைப்பு பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தியா நிதி உதவிகளை அளித்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா, (QUAD) குவாட் கூட்டமைப்பு எந்தவொரு தனிப்பட்ட நாட்டுக்கும் எதிரான ஒரு இராணுவக் கூட்டணி அல்ல, மாறாகக் கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவி, தடுப்பூசி விநியோகம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட பொதுவான உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் ஒரு கூட்டணி என்று வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு உளவுத்துறை பகிர்வு மற்றும் ஒருங்கிணைந்த உலகலாவிய ஒத்துழைப்பை வழங்குமாறு சர்வதேச நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. ஐ.நாசபையின் . அமைதி காக்கும் பணிகளில் 49க்கும் மேற்பட்ட பணிகளில் 200,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை இந்தியா ஈடுபடுத்தியுள்ளது. மேலும், பாதுகாப்பு கவுன்சிலின் விரிவாக்கம் உட்பட ஐ.நா. சீர்திருத்தங்களுக்குக் குரல் கொடுத்துவரும் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்கும் வேட்புமனுவை அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஜி4 நாடுகள் ஆதரித்துள்ளன.
IMF மற்றும் உலக வங்கியில் வாக்களிக்கும் அதிகாரத்தைப் பொறுத்தவரை ஏழாவது பெரிய உறுப்பினராக உள்ள இந்தியா உலகளாவிய தெற்கின் குரலாக உள்ளது. எங்களுடன் அல்லது எங்களுக்கு எதிரியாக என்ற வல்லரசின் பழைய கோட்பாட்டை விலக்கிவிட்டு இந்தியா சம நிலையில் செயல்பட்டுவருகிறது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் காரணம் காட்டி அமெரிக்கா 50 சதவீத வரி விதித்த நிலையிலும், தேசத்தின் நலனே முக்கியம் என்று இந்தியா நிற்கிறது.
ட்ரம்பின் தன்னிச்சையான வரிகள் மற்றும் நேட்டோ அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத இந்தியா, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது கருத்தியல் அடிப்படையில் அல்ல மாறாக வணிகத்தின் அடிப்படையில் என்று தெளிவாகக் கூறியது. ரஷ்யாவுடனான தனது நீண்டகால பாதுகாப்பு உறவுகளைத் தொடர்ந்துகொண்டே, iCET ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்காவுடனான தனது பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் இந்தியா வலுப்படுத்தியுள்ளது.
தனக்காக மட்டும் பேசாமல், இந்தியா இப்போது உலக தெற்கின் தலைமையாகப் பேசத் தொடங்கியுள்ளது. யாரையும் பகைக்காமல் தனது உறுதிப்பாட்டில் நிலையாக நிற்க முடியும் என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளது.
அடிபணிய வைக்க மிரட்டும் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இந்தியாவின் போக்கு எரிச்சலைத் தரலாம் ஆனால், இப்போது இந்தியா வல்லரசுகளின் கொள்கைக்கு ஏற்ப ஊசலாடும் நாடு அல்ல. மாறாக வசுதைவ குடும்பகம்” – உலகம் ஒரு குடும்பம் – என்ற கொள்கையால் வழிநடத்தப்படும் இந்தியா புதிய உலக ஒழுங்கின் முக்கியமான தூண் ஆகும்.
சொல்லப்போனால் இந்தியா எழுதும் புதிய Rulebook-ல் மற்ற நாடுகளை ஆதிக்கம் செலுத்தாத வகையில் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் ஒரு நம்பகமான கூட்டாளியாக மட்டுமே இருக்கப் போகிறது.
















