பிப்ரவரியில் நடைபெற உள்ள வங்கதேசத் தேர்தலுக்கு முன் சுயேட்சை வேட்பாளர் ஷெரீப் ஒஸ்மான் ஹாதி படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்தக் கொலையால் உண்மையில் யாருக்கு அரசியல் லாபம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக அவாமி லீக், பிஎன்பி போன்ற பிரதான கட்சிகளைத் தாண்டி, தீவிரவாத அமைப்புகளின் பக்கம் சந்தேகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
இந்தியாவுக்கு எதிரான தீவிர நிலைபாடு கொண்டவராக அறியப்பட்டவரும், டாக்கா-8 தொகுதியின் சுயேட்சை வேட்பாளருமான ஷெரீஃப் ஒஸ்மான் ஹாதி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, வங்கதேசத்தில் தேர்தலுக்கு முந்தைய அரசியல் சூழல் கடும் பதற்றத்தில் உள்ளது. கடந்த டிசம்பர் 12-ம் தேதி டாக்காவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்த அவரை, முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தால், பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்து இந்தியா மீதான எதிர்ப்பலைகளும் அதிகரிக்கத் தொடங்கின. இத்தகைய சூழலில், ஒஸ்மான் ஹாதியின் படுகொலையால் யார் யாரெல்லாம் லாபமடைந்தனர் என்பதே தற்போது பிரதான கேள்வியாக எழுந்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சிக்கும், தேர்தலில் முன்னணியில் உள்ள BNP கட்சிக்கும் இந்தக் கொலையால் நேரடி அரசியல் லாபம் எதுவுமில்லை என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக டாக்கா-8 தொகுதியில் BNP கட்சி சார்பில் மூத்த தலைவரான மிர்சா அப்பாஸ் போட்டியிடவுள்ளார்.
அதே தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடவிருந்த ஒஸ்மான் ஹாதி, அவருக்குப் பெரிய சவாலாக இருக்க மாட்டார் என்பதால் BNP கட்சி இந்தக் கொலையால் அரசியல் லாபம் அடைய வாய்ப்பில்லை என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர். இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம், அரசியல் குழப்பம், மத அடிப்படையிலான பதற்றம் மற்றும் தேர்தல் செயல்முறையைச் சீர்குலைப்பதில் லாபம் அடையும் தீவிரவாத குழுக்களே, இந்தக் கொலை சம்பவத்தின் உண்மையான பயனாளிகளாக இருப்பார்கள் என்ற கருத்தும் வலுபெற்று வருகிறது.
குறிப்பாக ஜமாத்-ஏ-இஸ்லாமி, அதன் மாணவர் அமைப்பான இஸ்லாமி சத்ரா ஷிபிர் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆதரவு அமைப்புகள் மீதுதான் இந்தச் சந்தேகம் வலுத்துள்ளது. குறிப்பாக இந்தக் கொலை சிறுபான்மையினரை தாக்கவும், ஊடகங்களை மிரட்டவும், தேர்தலைப் பாதிக்கவும் ஒரு காரணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, வங்கதேச புவிசார் அரசியல் நிபுணர் நாஹித் ஹெலால் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒஸ்மான் ஹாதியின் கொலை சம்பவத்திற்கு பின், சில இஸ்லாமிய மற்றும் இந்திய எதிர்ப்புக் குழுக்கள், குற்றவாளி ஃபைசல் கரீம் இந்தியா தப்பிச் சென்றதாகக் குற்றம் சாட்டின. அதே நேரத்தில் டாக்கா போலீசாரோ, அவர் இந்தியா சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதை தெளிவுபடுத்தினர். இருந்தபோதிலும் இந்த விவகாரம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரமாக மாற்றப்பட்டது.
இந்திய தூதரகத்தை தாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, நாடு முழுவதும் இந்தியாவுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டதால் பதற்றமான சூழல் தொடர்ந்தது. இதற்கிடையே, ஒஸ்மான் ஹாதி கொலை வழக்கில் குற்றவாளியாகக் கருதப்படும் ஃபைசல் கரீமுக்கு, கடந்த ஆண்டுகளில் ஜமாத்-ஏ-இஸ்லாமி அமைப்பை சார்ந்த வழக்கறிஞரான முகம்மது ஷிஷிர் மொனீர் இருமுறை ஜாமின் பெற்றுத்தந்துள்ளதாக BNP தலைவர் நிலோஃபர் சௌத்ரி மோனி குற்றம் சாட்டியுள்ளார். இது ஜமாத் தொடர்புடைய வலையமைப்புகள் இந்தக் கொலையில் மறைமுகமாகப் பங்கு பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வங்கதேச தேர்தல் தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த International Republican Institute நடத்திய கருத்துக்கணிப்பில், BNP கட்சிக்கு 33 சதவீதமும், ஜமாதுக்கு 29 சதவீதமும் ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்ட நிலையில், ஜமாத் தற்போது அரசியல் களத்தில் வலுவான இடத்தை பிடிக்க முயன்று வருவதாக அரசியல் நிபுணர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆகையால், முக்கிய அரசியல் கட்சிகளைத் தாண்டி, குழப்பத்தையும், பயத்தையும் பயன்படுத்தி, அரசியல் அதிகாரத்தை விரிவுபடுத்த விரும்பும் அமைப்புகளே ஒஸ்மான் ஹாதியின் கொலையால் பயன்பெறுகின்றன என்பது அரசியல் நிபுணர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. அப்படி பார்க்கும்போது இந்தப் படுகொலை சம்பவம் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக மட்டுமல்லாமல், வங்கதேச அரசியல் சூழலை நிலைகுலையச் செய்யும் ஒரு தந்திர யுக்தியாகவும் பார்க்கப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
















